தமிழ் ஓசை
தமிழ் ஓசை

முஸ்லிம்களின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரம்

0 109

கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை தகனம் செய்ய எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு மன்னிப்பு கேட்க சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுப்பு வெளியிட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் எந்தவொரு அறிக்கையையும் வெளியிடுவதற்கு முன்னர் அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஆராய குழுவொன்றை நியமிக்க வேண்டும் என அமைச்சர் பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பகிரங்க மன்னிப்புக் கோருமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இச்சம்பவம் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் குற்றத்திற்கு ஒப்பானது என்பதால் சுகாதார அமைச்சு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்திருந்தார்.

எவ்வாறாயினும், இந்த கோரிக்கைக்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மறுப்பு வெளியிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டில் கோவிட் தொற்றினால் உயிரிழந்த முஸ்லிம்களை தகனம் செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்திருந்தது.எனினும், இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக சுகாதார அமைப்பும் அரசாங்கத்தின் இந்த தீர்மானத்தில் மாற்றம் செய்ய கோரிக்கை விடுத்திருந்த போதிலும் அதனை இலங்கை அரசாங்கம் அப்போது ஏற்றிருக்கவில்லை.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் ஏற்பட்ட சலசலப்பைத் தொடர்ந்து, கோவிட் வைரஸ் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களை கான்கிரீட் கல்லறைகளில் புதைக்க அரசாங்கம் முடிவு செய்தது.

இதேவேளை, 2019 ஆம் ஆண்டு இறுதிக் காலப்பகுதியில் கோவிட் தொற்று பரவியது. இலங்கையில் 672,576 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 16,882 பேர் உயிரிழந்தனர்.

உலக அளவில் 694,122,809 பேர் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 6,910,119 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.