தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கடுமையான பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் – ரணில் விக்ரமசிங்க

0 70

நாட்டின் பொருளாதார ஸ்தீர நிலையை ஏற்படுத்த கடுமையான பொருளாதார மறுசீரமைப்பு அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

புதிய பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பிற்குள் சகலரதும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதன் ஊடாக வீழ்ச்சியடையாத வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நேற்று (28) ஆரம்பமான 2023 இலங்கை பொருளாதார மாநாட்டின் ஆரம்ப உரையை ஆற்றிய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியதாவது:

இலங்கையில் கடன் மறுசீரமைப்புக்கு கொள்கையளவில் உடன்பாடு வழங்கிய முதலாவது வங்கி சீனா எக்ஸிம் வங்கியாகும். உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்கள் குழு மிக விரைவில் கொள்கையளவில் இதேபோன்ற உடன்பாட்டை வழங்கும் என்று நம்புகிறோம்.

மேலும், எதிர்வரும் டிசம்பரில் இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் முதல் மீளாய்வை சர்வதேச நாணய நிதியம் நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாடாக நாம் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தவிருக்கும் பொருளாதாரக் கொள்கைகள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் உள்ளடங்கும். அதிலிருந்து நாம் பின்வாங்கினால், கடன் வழங்குநர்கள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முற்படுவார்கள். அதன்படி, இந்த ஒப்பந்த கட்டமைப்பிற்குள் நாம் செயல்பட வேண்டும்.

பொருளாதார நெருக்கடியின் போது மேடைகளில் இருந்து தீர்வுகளைப் பற்றி பேசிய அரசியல் தலைவர்கள் இந்த திட்டத்தை அங்கீகரிக்கவில்லை. ஆனால் அவர்கள் இதுவரை எந்த தீர்வையும் முன்வைக்கவில்லை. ஒரு நாடாக, நாம் என்றென்றும் வங்குரோத்து நிலையில் இருக்க முடியாது. எனவே, நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க்கும் வகையில் தற்போது செயல்பட்டு வருகிறோம்.

நாங்கள் போட்டித்தன்மையுடன் செயற்பட விரும்பாததால் ஏற்றுமதி பொருளாதாரத்திற்கு நாங்கள் தயாராக இல்லை. ஆனால் இப்படியே தொடர்ந்து செல்ல முடியாது. இதுவே எங்களுக்குக் கிடைத்துள்ள கடைசி வாய்ப்பு.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால், இந்தப் புதிய பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பிற்குள் நாம் செயல்பட வேண்டும்.

அதிலிருந்து நாம் பின்வாங்கினால் இன்னும் 10 வருடங்களில் இந்த நாடு மீண்டும் பொருளாதார நெருக்கடியை சந்திப்பதை தடுக்க முடியாது. அந்த நிலைக்கு திரும்புவதை நாம் யாரும் விரும்பவில்லை. எனவே நீங்கள் அனைவரும் மிகவும் போட்டித்தன்மையுடன் செயற்பட வேண்டும். எங்களிடம் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளன. எனவே போட்டித்தன்மைக்கு முகங்கொடுத்து முன்னேற வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.