Developed by - Tamilosai
நீதியமைச்சர் அலி சப்ரி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதன் மூலம் சர்வதேசத்துடன் ஒன்றித்து செயற்பட முடியாது. இதன் ஊடாக ஐ.நா.வுக்கு பதில் வழங்க முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழிற்கு சென்று காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நஷ்ட ஈடாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று நீதியமைச்சர் கூறியுள்ளார். 2009 இல் இருந்து தாய்மார் போராடுவது இந்த ஒரு இலட்சம் ரூபாய்க்காக அல்ல என்பதை அரசாங்கத்தரப்பினர் புரிந்துக் கொள்ள வேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்று தான் அவர்கள் கோருகிறார்கள். இது அவர்களின் உரிமையாகும்.
இதற்கு பதில் வழங்காமல், யாழுக்குச் சென்று ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்துவதால் சர்வதேச பிரச்சினைகளுக்கு தீர்வொன்று கிடைத்துவிடாது.
இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குவதாயின் சரியான முறையில் அதனைக் கையாள வேண்டும். அதேநேரம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட எத்தனை தமிழ்- முஸ்லிம் இளைஞர்கள் இன்னமும் சிறையில் வாடுகிறார்கள்?
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை விடுவித்தமையால் சர்வதேசத்தை ஏமாற்றிவிடலாம் என நினைக்கக்கூடாது. ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என்பவர் தனி ஒரு நபர். அவருக்காக பல சட்டத்தரணிகள் வாதாடினார்கள். இன்று அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். இதனையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
ஆனால், ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவைப் போன்று எத்தனையோ பேர், இன்னமும் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள் வெளிஉலகிற்கு தெரியாது.
இந்த நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிராக கையெழுத்து போராட்டமொன்றையும் ஆரம்பித்துள்ளது.
இந்தச் சட்டமானது எதிர்க்காலத்தில் நிச்சயமாக சிங்கள மக்களையும் பாதிக்கும். இதனை மக்கள் உணர்ந்துக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்