தமிழ் ஓசை
தமிழ் ஓசை

கல்லீரல் பாதிப்பில் இருந்து தப்புவது எப்படி?

0 116

மனித உடலில் உள்ள 5 முக்கிய உறுப்புகளில் கல்லீரலும் ஒன்று. நம் உடல் உறுப்புகளில் மூளைக்கு அடுத்து இரண்டாவது பெரிய மற்றும் மிகவும் சிக்கலான உறுப்பு கல்லீரல் ஆகும். உடலின் செரிமான அமைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. உணவுகள், மருந்துகள், பானங்கள் என நாம் சாப்பிடும் அல்லது பருகும் எதுவாக இருப்பினும் அது கல்லீரல் வழியாகவே செல்கிறது. எளிமையாக சொன்னால் கல்லீரல் இன்றி நம்மால் வாழ முடியாது. உண்ணும் உணவில் உடலுக்கு நன்மை செய்ய கூடியவை மற்றும் தீங்கு செய்யக் கூடியவை என தரம் பிரித்து உடலுக்கு கேடு விளைவிப்பவற்றை உடனடியாக வெளியேற்றும் வேலையை செய்கிறது கல்லீரல்.உடலின் வலது பக்கம் கீழ் விலா எலும்புக்கு அடியில் அமைந்துள்ள கல்லீரல், உணவில் உள்ள அனைத்து கொழுப்பையும் உடைக்க தேவையான பித்தம் எனப்படும் திரவத்தை உற்பத்தி செய்கிறது. மிக முக்கியமாக இது குளுக்கோஸை சேமித்து வைக்கிறது.

இது நமது அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆற்றலை அளிக்கிறது. கல்லீரல் சரியில்லை என்றால் உங்கள் ஆரோக்கியம் சரியில்லை என்று எடுத்துக் கொள்ளலாம். கல்லீரல் பாதித்தால் திடீர் மயக்கம் வரும். உணவுக்குழாயில் இருக்கும் ரத்தக்குழாய் அனைத்தும் வீங்கி விடும். பிறகு ரத்த வாந்தி வரும். மது அருந்துபவர்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் இருக்கும். அதிக மதுப்பழக்கம் உள்ளவர்களுக்கு ரத்த வாந்தி மட்டுமல்லாமல் ஒரு கட்டத்தில் கோமாநிலை கூட ஏற்படும். உயிரிழப்புகளும் நிகழும். உங்களுக்கு போதை தரும் மதுபானம் மிகவும் அதிகமாக பிடிக்கும் என்றால், மதுவுக்கு கல்லீரலை ரொம்ப பிடிக்கும். மதுபானம் கல்லீரலை கொஞ்சம், கொஞ்சமாக அரிக்கும். இதனால் கல்லீரல் வீங்கி விடும். நன்றாக இருக்கும் கல்லீரலை குடிப்பழக்கம் கெட்டுப்போகச் செய்யும். அடுத்து கல்லீரலில் புற்றுநோய் பாதிப்பு வரும்.

கல்லீரலை மதுபானம் மட்டுமல்லாமல் வைரஸ் கிருமியும் பாதிப்படையச் செய்யும். அதன் பெயர் ஹெபடைடிஸ் வைரஸ். இந்த வைரஸ் ஏ, பி, சி, டி, இ என 5 வகைப்படுத்தப்படுகிறது. ஹெபடைடிஸ் ஏ என்பது தண்ணீரை கொதிக்க வைக்காமல் பயன்படுத்துவதால் ஏற்படக் கூடிய வைரஸ். பெண் ஒருவருக்கு மஞ்சள் காமாலை நோய் இருந்து கையை சரியாக கழுவாமல் சமைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் சமைக்கும் உணவை சாப்பிடும் குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை நோய் வந்து விடும். இதுபோன்ற பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது ஹெபடைடிஸ் ஏ வைரஸ்.

அணையில் இருந்து வரும் தண்ணீர் பல இடங்களை கடந்து கடைசியாக வீட்டு குடிநீர் பைப்புக்கு வருகிறது. அந்த தண்ணீர் சுத்தமான நீர் தானா? என்றால் தெரியாது. அந்த நீரை நன்றாக கொதிக்க வைத்து குடித்தோம் என்றால் ஹெபடைடிஸ் ஏ வைரஸ் அழிந்து விடும். வைரஸ் என்பது கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிர் கிருமி. பாக்டீரியாவை மைக்ரோஸ்கோப் வைத்து கண்ணால் பார்த்து விடலாம். ஆனால் வைரஸ் கிருமிகளை சாதாரண மைக்ரோஸ்கோப்பால் பார்க்க முடியாது. வைரசை மைக்ரோஸ்கோப்பில் 100 மடங்கு அதிகமான திறன் கொண்ட எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் மூலமே கண்டுபிடிக்க முடியும். ஹெபடைடிஸ் ஏ வைரஸ்தான் மஞ்சள் காமாலை நோயை ஏற்படுத்தும். மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பசி இருக்காது. காய்ச்சல் அடிக்கும். குமட்டல் வரும். சிறுநீர் மஞ்சளாக வரும். கண் மஞ்சள் நிறத்தில் காணப்படும். இவர்களை பரிசோதனை செய்தால் மஞ்சள் காமாலை இருப்பது உறுதியாகும். பின்னர் அந்த நோயை குணமாக்க சிகிச்சை பெற வேண்டும். ஹெபடைடிஸ் பி வைரஸ் ரத்தத்தினாலோ, ஊசி போடுவதினாலோ வரக்கூடியது.

ஹெபடைடிஸ் பி உள்ள நபரின் ரத்தத்தை சோதிக்காமல் மற்றவருக்கு செலுத்தி விட்டால் அந்த நபருக்கும் வைரஸ் பி நோய் பாதிப்பு ஏற்படும். அதனால் தான் தீவிர பரிசோதனைக்கு பின்னரே ஒரு நபரிடம் இருந்து தானமாக பெறப்படும் ரத்தம் மற்றொருவருக்கு செலுத்தப்படுகிறது. இதேபோல ஆஸ்பத்திரியில் கொதிக்க வைத்த நீரில் ஊசியை சுத்தம் செய்து அதன்பிறகு மருந்தை ஏற்றி ஊசி போடுவார்கள். முதலில் ஊசி போடப்படும் நபருக்கு ஹெபடைடிஸ் பாதிப்பு இருந்து தண்ணீரை சரியாக கொதிக்க வைக்காமல் மற்றொரு நபருக்கு ஊசி போடுகிறோம் என்றால் அந்த நபருக்கும் ஹெபடைடிஸ் பி பாதிப்பு ஏற்படும்.

பாதிப்புள்ள நபரின் பல்லை தொட்டு விட்டு அதே கையால் மற்றொருவரின் பல்லை தொட்டாலும் வைரஸ் தொற்றிக் கொள்ளும். இந்த வைரஸ் தாக்குதலால் விரைவில் கல்லீரல் பாதிக்கப்பட்டு செயல் இழக்கும் அபாயம் இருக்கிறது. இந்த நோயை ஆரம்பத்திலேயே மருத்துவப் பரிசோதனை இன்றி கண்டறிய இயலாது. 10-15 வருடங்கள்கூட உடலில் தங்கி, கொஞ்சம் கொஞ்சமாகக் கல்லீரலை சிதைவு அடையவைக்கும். ஹெபடைட்டிஸ் பி-க்கான தடுப்பூசி இப்போது கிடைப்பதால், இதன் பாதிப்பு குறைந்துள்ளது. மேலும் இன்றைய நவீன மருத்துவ உலகில் நோய் பரவாமல் இருக்க தகுந்த மருத்துவ உபகரணங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஹெபடைடிஸ் வந்தால் அதற்கு அடுத்து சிரோசிஸ் எனப்படும் பாதிப்பு வரும்.

அதைத்தொடர்ந்து புற்றுநோய் வந்து விடும். கல்லீரல் புற்றுநோய் வெளியே தெரியாமல் உள்ளுக்குள்ளேயே இருக்கும். திடீரென கட்டிகள் பெரிதாகி ரத்த வாந்தி வரும். மஞ்சள் காமாலை வரும். அதன்பிறகு ஒன்றும் செய்ய முடியாது. முழு உடல் பரிசோதனை மூலம் இதுபோன்ற கல்லீரல் புற்றுநோய்களை கண்டுபிடித்து விடலாம். சிலருக்கு வேறு ஏதாவது சிகிச்சைக்கு செல்வார்கள், சோதித்து பார்க்கும் போது இதுபோன்ற புற்றுநோய்களும் கண்டுபிடிக்கப்படும். ஆரம்ப கட்டத்தில் புற்றுநோயை கண்டுபிடித்து விட்டால் சிகிச்சை அளித்து குணப்படுத்தி விடலாம்.

அடுத்தடுத்த கட்டத்துக்கு சென்று நிலைமை விபரீதமாகி விட்டால் உயிர் பிழைக்க முடியாது. அல்லது பாதிக்கப்பட்ட நபரின் கல்லீரலை எடுத்து விட்டு விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த நபரின் கல்லீரலை பொருத்தலாம். காய்ச்சல் , வயிற்று வலி, குமட்டல், வாந்தி, மயக்கம், களைப்பு, பசியின்மை, எடை குறைவு, கணுக்கால் வீக்கம், மஞ்சள் காமாலை உள்ளிட்டவை கல்லீரல் பாதிப்பின் அறிகுறிகளாக கருதப்படுகிறது. 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும் போது கல்லீரல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

ஹெபடைடிஸ் வைரஸ் பரவும் தன்மையுடையது என்பதால் பாதிக்கப்பட்டவரின் ரத்தம் அல்லது உமிழ்நீர் போன்றவை மூலம் பிறருக்கு பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே ரேசர்கள், ரேசர் கத்திகள், பல் துலக்கும் பிரஷ் உள்ளிட்டவற்றை பகிர்வதைத் தவிர்க்கவும். கல்லீரல் பாதிப்பு வராமல் இருக்க ஹெபடைடிஸ் பி தடுப்பூசி போட்டுக் கொள்வது சிறந்தது. மருத்துவரின் பரிந்துரையின் பேரிலேயே மருந்துகள் வாங்கி சாப்பிடுங்கள். மது குடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள். ஓட்டலில் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

மண்ணீரல்

கல்லீரலுக்கு அருகில் வயிற்றின் இடதுபுறம் உள்ளது மண்ணீரல். நிமோனியா, மூளைக்காய்ச்சலை உருவாக்கும் குறிப்பிட்ட சிலவகை பாக்டீரியா தொற்றுகளிடம் இருந்து பாதுகாப்பது உள்பட ஏராளமான வேலைகளை மண்ணீரல் செய்கிறது. மண்ணீரலின் முக்கிய பணி ரத்தத்தை உருவாக்கி, சேமித்து வடிகட்டி நோய் எதிர்ப்பு காரணிகளை உருவாக்கி உடலை பாதுகாக்கிறது. பழைய ரத்த சிவப்பணுக்கள் மறுசுழற்சி செய்யப்படுவதும் மண்ணீரலில் தான். தட்டணுக்கள், வெள்ளை அணுக்களை மண்ணீரல் தன்னுள்ளே சேமித்து வைக்கிறது. மண்ணீரல் ஆரோக்கியமாக இருந்தால் தான் மனிதனின் செயல்களும், சிந்தனையும் தெளிவாக இருக்க முடியும். முழு திறனுடன் செயலாற்ற மனிதனால் இயலும். மண்ணீரல் முதிர்ந்த ரத்த சிவப்பணுக்களை அழித்து மூளை, நரம்பு மண்டலத்தை தூண்டி இதயம், மூளையை இயல்பாக வைக்க உதவுகிறது. மண்ணீரல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் சில நேரங்களில் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

அடிக்கடி மன அழுத்தம் ஏற்படுவது, கோபம், எரிச்சல், மது, சிகரெட் பழக்கம் போன்றவை மண்ணீரல் பாதிப்புக்கு காரணங்களாக அமைகின்றன. மண்ணீரல் ரத்தத்தை உறிஞ்சும் தன்மை உடையது என்பதால் ரத்தத்தில் அமிலத்தன்மை அதிகமானால் மண்ணீரல் பாதிக்கும். இரைப்பை , பித்தப்பை, வயிற்றில் புண் மற்றும் கல்லீரல் அழற்சியும் மண்ணீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகித்தாலும் மண்ணீரல் இல்லாமலும் வாழ முடியும். கல்லீரல், நிணநீர் கட்டிகள் இதன் பணியை செய்யும்.

மண்ணீரலை அகற்றியவர்களுக்கு அடிக்கடி தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வேகமான இதயத்துடிப்பு, வாந்தி, மயக்கம், உடல்எடை அதிகரிப்பு, வயிற்றில் அபரிமிதமான வலி, தொண்டை உலர்ந்து போவது, உடல் முழுவதும் வலி, வீக்கம், சோர்வாக உணர்வது, மஞ்சள் காமாலை, கட்டுப்பாடற்ற சிறுநீர், ஆகியவை மண்ணீரல் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும். மதுவை தவிர்த்து உணவு பழக்கத்தில் மாற்றம் செய்தால் நம்மை காப்பாற்றி கொள்ளலாம்.

அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும். பழங்கள், காய்கறிகள், போன்றவற்றை சீரான மற்றும் போதுமான அளவு உட்கொள்ள வேண்டும். மண்ணீரலை பராமரிப்பதால் ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம்.

Leave A Reply

Your email address will not be published.