தமிழ் ஓசை
தமிழ் ஓசை

சூரியனை ஆய்வு செய்ய.. விண்ணில் பாய்ந்தது ஆதித்யா எல்1 விண்கலம்!

0 99

நிலவின் தென் துருவ பகுதியை ஆராய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கிய நிலையில், சூரியனை ஆராய்வதற்கும் ஆதித்யா எல்1 எனும் விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் இன்று வெற்றிகரமாக ஏவியுள்ளது

கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது. விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்த வெற்றியை தொடர்ந்து பல்வேறு நாடுகள் இந்தியாவுடன் சேர்ந்து விண்வெளி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள முன்வந்துள்ளன. இந்நிலையில் இந்தியாவுக்கு மற்றொரு மைல் கல்லாக அமைய உள்ளது ஆதித்யா எல்1 எனும் திட்டம். அதாவது இந்த திட்டத்தின் மூலம் ஏவப்படும் விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும். சூரியனை ஆய்வு செய்ய முக்கியமான காரணம் அதிலிருந்து வெளி வரும் காந்த புயல்தான். இந்த காந்த புயல் பூமியில் இருக்கும் அனைத்து மின்னணு சாதனங்களையும் செயலிழக்க வைத்துவிடும் திறன் கொண்டதாகும்.

இன்றைய தேதியில் நூற்றுக்கணக்கான அணு உலைகளை பாதுகாக்க மின்னணு சாதனங்கள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அப்படி இருக்கையில் காந்த புயல் காரணமாக இது பாதிக்கப்பட்டால் பேரழிவு ஏற்படும். அதேபோல இந்த புயலிலிருந்து ஒரேயொரு செயற்கைக்கோள் கூட தப்பிக்காது. எனவே காந்த புயல்களை முன்கூட்டியே கணிக்கவும், சூரியனின் பல்வேறு அடுக்குகளை ஆய்வு செய்யவும் இந்த ஆதித்யா L1 எனும் புதிய விண்கலம் அனுப்பப்பட இருக்கிறது. இந்தியா சார்பில் சூரியனை கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் அனுப்பப்படும் முதல் விண்கலம் இதுதான்

பெங்களூரு யுஆர் ராவ் செயற்கைக்கோள் மையத்தில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள எஸ்டிஎஸ்சி-ஷார் விண்வெளி நிலையத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் கொண்டுவரப்பட்டது. அங்கு அனைத்து விதமான சோதனைகளும் நிறைவடைந்த நிலையில் அதை PSLV-C57 ராக்கெட்டுடன் விஞ்ஞானிகள் பொருத்தினார்கள். இதனையடுத்து நேற்று காலை இதை விண்ணில் செலுத்துவதற்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்கியது. இந்நிலையில் இன்று காலை 11.50 மணியளவில் இது விண்ணில் ஏவப்பட்டது.

சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து இந்த ஆதித்யா எல்1 விண்கலம் ஆய்வு செய்யும். பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ எனும் இடத்தில் இந்த விண்கலம் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. இது சூரியனை நோக்கிய கோணத்தில் வைக்கப்படும். தொடர்ந்து சூரியனில் நடக்கும் மாற்றங்களை ஆய்வு செய்வதுதான் இதன் பணி. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே 15 கோடி கி.மீ தொலைவு இருக்கிறது. இதில் பூமியின் ஈர்ப்பு விசை சில லட்சம் கி.மீ வரை இருக்கும். அதேபோல சூரியனின் ஈர்ப்பு விசை சில கோடி கி.மீ வரை அதிக ஆதிக்கம் செலுத்தும். இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட புள்ளிதான் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட்’. இப்படி சூரியனுக்கும் பூமிக்கும் இடையே 5 புள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த புள்ளியில் எந்த பொருளை கொண்டு சென்று நிறுத்தினாலும் அது நிலையாக ஒரே இடத்தில் நிற்கும்.

இன்று ஏவப்பட்டுள்ள ஆதித்யா எல்1 விண்கலம் எல்1 எனும் இலக்கை சென்றடைய சுமார் 127 நாட்கள் வரை ஆகும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.