தமிழ் ஓசை
தமிழ் ஓசை

அடுத்த வருடம் முதல் முட்டை, கோழி இறைச்சியின் விலை வீழ்ச்சியடையும் – அமைச்சர் மஹிந்த அமரவீர

0 106

அடுத்த வருடம் முதல் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை வீழ்ச்சி அடையுமென்பதுடன், மீண்டும் விலை அதிகரிப்பு ஏற்படாதெனவும், கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இந்நிலையில், அடுத்த வருடம் முதல் முட்டைகளை இறக்குமதி

செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாதெனவும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று முன்தினம் (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,

“கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தியில் நம் நாடு தன்னிறைவு பெற்றிருந்தாலும், கடந்த காலங்களில் ஏற்பட்ட கொவிட் நோய்த் தொற்று நிலைமையும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் மற்றும் கால்நடைத் தீவன உற்பத்தி குறைந்ததன் விளைவாகவும் கோழி இறைச்சி மற்றும் முட்டை உற்பத்தி குறைந்தது.

தற்போது கோழிப் பண்ணைகளுக்கு சுமார் 3,420,000 புதிய கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டுள்ளதுடன், பெரும்பாலும் அவை எதிர்வரும் டிசெம்பருக்குள் முட்டையிடும் பருவத்துக்கு வளர்ந்துவிடும். எனவே, டிசெம்பருக்கு பின்னர், இந்த நாட்டில் முட்டை உற்பத்தி மேலும் அதிகரிக்கும்.

கோழிப் பண்ணைகளுக்கு தேவையான தீவன உற்பத்திக்காக சோளத்தை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை இந்தத் தொழில்துறையினருக்கு வழங்கியுள்ளோம். எதிர்காலத்தில் எமது மக்கள் இதன் மூலம் பயனடைவர்.

இடைக்கால, கால்நடை அபிவிருத்தித் திட்டத்தின் படி, வடமாகாணத்தில் கால்நடை வளத்தை மேம்படுத்தும் பணிகளை வலுவூட்டுவதற்கான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்காக செலவிடப்பட்ட தொகை 37 மில்லியன் ரூபாவாகும். சிறிய மற்றும் நடுத்தரக் கோழிப்பண்ணை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு நாள் வயதுடைய நாட்டுக் கோழிக் குஞ்சுகளை வழங்குதல், கிராமப்புறங்களில் முட்டை உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் போசாக்கை அதிகரிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 48 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அண்மைய பொருளாதார நெருக்கடி மற்றும் கொவிட் தொற்றுக் காரணமாக உள்நாட்டுக் கோழி இறைச்சி உற்பத்தி 30 சதவீதத்தினால் குறைந்துள்ளது. ஆனால், தற்போது பிராய்லர் கோழிக் குஞ்சுகள் அதிகளவில் பண்ணைகளுக்கு சேர்க்கப்படுவதால், இந்த ஆண்டு இறுதிக்குள் நம் நாட்டின் கோழி இறைச்சி உற்பத்தி, முந்தைய நிலைக்கு திரும்பலாமென்று குறித்த தொழில்த்துறையினர் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக இந்த ஆண்டு இறுதிக்குள் கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை மேலும் குறையலாமென எதிர்பார்க்கப்டுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.