தமிழ் ஓசை
தமிழ் ஓசை

48 நாட்களில் 11 எரிவாயு சிலிண்டர் வெடிப்பு – CID விசாரணைக்கு அழைப்பு!

0 171

நாடளாவிய ரீதியில் பதிவாகும் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறிய சம்பவங்கள் தொடர்பாக ஆராய குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைக்கு அழைப்பு விடுக்குமாறு எதிர்க்கட்சி தெரிவித்தள்ளது.

இந்த விடயம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் புலனாய்வொன்றை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டின் பல பாகங்களில் இருந்து எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறும் சம்பவங்களைத் தொடர்ந்து உள்நாட்டில் தினசரி எரிவாயுவைப் பயன்படுத்தும் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்ற பல இடங்களை பட்டியலிட்ட பிரேமதாச, கடந்த 48 நாட்களில் 11 சம்பவங்கள் பதிவாகியுள்ள அதேவேளை, இந்த சம்பவங்கள் அசாதாரணமானது எனவும் குறிப்பிட்டார்.

அரசாங்கம் வீட்டு உபயோகத்திற்காக 18 லிட்டர் கலப்பின எரிவாயு உருளையை அறிமுகப்படுத்திய பின்னர் இந்த நிகழ்வுகள் தொடங்கியது என்றும் இது மக்களை ஏமாற்றி பாரிய இலாபத்தை ஈட்டும் அரசின் தந்திரம் என்றும் அவர் கூறினார்.

மேற்கூறிய விடயத்தில் முக்கிய விடயங்களில் ஒன்று வாயு கலவை மாற்றப்பட்டு எடை குறைக்கப்பட்டது எனவும் ஏனைய முக்கிய விடயம் எரிவாயு சிலிண்டர்களில் புரொப்பேன் மற்றும் பியூட்டேன் வீதங்கள் பூர்த்தி செய்யப்படாத நிலைக்கு மாற்றப்பட்டமை எனவும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.