தமிழ் ஓசை
தமிழ் ஓசை

3 மாதங்களின் பின்னர் பூஸ்டரை பெற்றுக்கொள்க – சந்திம ஜீவந்தர

0 128

இரண்டாவது கொரோனா தடுப்பூசியை பெற்று மூன்று மாதங்களின் பின்னர் பூஸ்டர் எனப்படும் செயலூக்கி தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ட்விட்டர் பதிவொன்றினை இட்டுள்ள அவர், நாட்டில் பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளினால் உருவாக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மூன்று மாதங்களில் குறைவடைவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய சைனோபாம் தடுப்பூசியினால் உருவாக்கப்படும் எதிர்ப்பு சக்தியே விரைவாக குறைவடைகின்றமை ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

இரண்டாவது தடுப்பூசியாக மொடர்னா தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகவுள்ளதாக கலாநிதி சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து ஸ்புட்னிக் – வி, அஸ்ட்ராசெனகா மற்றும் ஸ்புட்னிக் – வி முதலாம் தடுப்பூசிகள் முறையே எதிர்ப்பு சக்தியை அதிகமாக வெளிப்படுத்தியுள்ளன.

சைனோபாம் தடுப்பூசி தற்போது அதிகளவில் பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசியாகும்.

இலங்கையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை மற்றும் மரணித்தவர்களின் எண்ணிக்கை என்பன குறைவடைந்தமைக்கு சைனோபாம் தடுப்பூசி சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் முதல் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்று கொவிட்-19 தொற்று உறுதியானவர்கள் ஆறு மாதங்களுக்கு பின்னர் பூஸ்டர் எனப்படும் செயலூக்கி தடுப்பூசியை பெற்றுக் கொள்ள முடியும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் மரபணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.