தமிழ் ஓசை
தமிழ் ஓசை

2025 வரை குறைவாக சாப்பிட நாட்டு மக்களிடம் வடகொரியா ஜனாதிபதி வேண்டுகோள்

0 208

 உணவுப் பற்றாக்குறை  நெருக்கடியை நிவர்த்தி செய்யும் முயற்சியில், 2025 ஆம் ஆண்டு வரை தனது நாட்டு மக்களைக் குறைவாகச் சாப்பிடுமாறு வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும், ‘விவசாயத் துறை அதன் தானிய உற்பத்தித் திட்டத்தை நிறைவேற்றத் தவறியதால் மக்களின் உணவு நிலைமை இப்போது பதற்றமாகவுள்ளது’ என்றும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரத் தடைகள், கொரோனா வைரஸ் தொற்று நோய் மற்றும் கடந்த ஆண்டு சூறாவளி ஆகியவற்றால் வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2020ஆம் ஆண்டு ஜனவரியில் வடகொரியா, அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திருந்த சீனாவுடனான தனது எல்லையை மூடியது.

இதனால், வடகொரியாவில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறையால், அந்நாட்டில் வசிக்கும் மக்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

இதனிடையே 2025ஆம் ஆண்டுக்கு முன்னர் வட கொரியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சுங்கச்சாவடிகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையே அரசாங்கம் மக்களுக்குத் தேவையான தானியங்களை மக்களே உற்பத்தி செய்யுமாறு ஊக்குவிக்கிறது.

இந்நிலையில், ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய இராணுவ ஆணையம், கிழக்கு மாகாணமான தெற்கு ஹம்கியோங்கில் ஆபத்தான நிலைமை குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை நடத்தியது.

அணுசக்தி மற்றும் ஆயுதத் திட்டங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், சர்வதேசத் தடைகளால் ஏற்கனவே நலிவடைந்துள்ள தனிமைப் பொருளாதாரத்தின் நெருக்கடி பற்றிய கவலைகளுக்கு மத்தியில், இந்த சந்திப்பு வந்தது.

முன்னதாக, ஐ.நா.வின் உணவு மற்றும் விவசாயக் கழகம், ‘வடகொரியா தனது உணவுப் பற்றாக்குறையை சமாளிக்க வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யாவிட்டால் ஒகஸ்ட் தொடங்கி ஒக்டோபருக்குள் நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடும்.

இந்த ஆண்டு மட்டும் 860,000 டன் உணவுப் பஞ்சம் ஏற்படும்’ என எச்சரித்திருந்தது.

1990ஆம் ஆண்டுகளில் சோவியத் ஒன்றியம் பிரிந்தது. அதுவரையில் சோவியத் ஒன்றியத்திடம் இறக்குமதி பொருட்களுக்காக பெருமளவில் நம்பியிருந்த வடகொரியா பெரும் பஞ்சத்தை சந்தித்தது.

இந்த பஞ்சத்தின்போது மக்கள் எலிகளையும் புல்லின் சாரையும் உண்டனர்.அத்துடன், சுமார் 3 மில்லியன் வட கொரியர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.