Developed by - Tamilosai
அடுத்த இரண்டு மாதங்களில் மேலுமொரு கொரோனா வைரஸ் தொற்று அலைக்கு நாடு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இதேவேளை, அரச நிறுவனங்களிலும் சுகாதார நடைமுறைகள் புறக்கணிக்கப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளதாக குறித்த சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் வைத்தியர் ருவன் ஜயசூரிய குற்றம்சாட்டியுள்ளார்.
பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர் கொரோனாத் தொற்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் போராட்டங்கள் மற்றும் அதிகளவில் மக்களின் ஒன்றுகூடல்களை அவதானிக்க முடிந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலைமை காரணமாக எதிர்வரும் காலங்களில் இலங்கையானது கொரோனா வைரஸின் மற்றுமொரு அலையை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், இலங்கையின் 60 வீதத்திற்கும் அதிகமானவர்கள் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளமையால் வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருக்க முடியும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும் வைரஸின் புதிய மாறுபாடுகள் உருவாகி வருகின்றன. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.