தமிழ் ஓசை
தமிழ் ஓசை

13 பற்றி சிங்களக் கட்சிகளின் மனட்சாட்சி பேசுமா? அ.நிக்ஸன்

0 535

இந்திய- இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக அப்போது கொழும்பில் இருந்த முன்னாள் இந்தியத் தூதுவர் ஜே.என். டிக்சிற் 1998 ஆம் ஆண்டு எழுதிய அசெய்மன்ற் கொழும்பு (Assignment Colombo) என்ற நூலில், சிங்கள மக்களைக் கோவப்படுத்தக்கூடாது என்பதற்காகவே வடக்குக் கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் எனக் கூறப்படவில்லை என்கிறார்

இந்திய- இலங்கை ஒப்பந்தத்தில் வடக்குக் கிழக்கு தமிழ்பேசும் மக்களின் மரபுவழித்  தாயகம் (Traditional homeland) என்று கூறப்படவில்லை. மாறாக வரலாற்று வாழ்விடங்கள் (Historical habitations) என்றே கூறப்பட்டிருக்கிறது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் தொடர்பாக அப்போது கொழும்பில் இருந்த முன்னாள் இந்தியத் தூதுவர் ஜே.என். டிக்சிற் 1998 ஆம் ஆண்டு எழுதிய அசெய்மன்ற் கொழும்பு (Assignment Colombo) என்ற நூலில், சிங்கள மக்களைக் கோவப்படுத்தக்கூடாது என்ற நோக்கிலேயே வடக்குக் கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகம் எனக் கூறப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

வரலாற்று வாழ்விடங்கள் என்று கூறினால், சிங்கள மக்களை அங்கு குடியேற்றம் செய்வதற்கும் ஏற்கனவே குடியேற்றம் செய்யப்பட்ட சிங்கள மக்களின் இருப்புகளைத் தொடர்ந்து தக்கவைப்பதற்கும் வசதியாக இருக்கும் என்ற நோக்கிலேயே இலங்கை அந்தச் சொற் பிரயோகத்துக்கு இணக்கியிருக்க வேண்டும்.

டிக்சிற் அன்று கொழும்பில் தூதுவராக இருந்தபோது நடத்திய பல சுற்றுப் பேச்சுக்களில் வடக்குக் கிழக்கு தமிழ்பேசும் மக்களின் மரபுவழித் தாயகம் என்பதை ஜே.ஆர்.ஜயவர்த்தனா ஏற்க மறுத்திருந்தார்.

இதனாலேயே தமிழ் மக்களை ஏதோவொரு வழியில் சமாளிப்பதற்கும், சிங்கள மக்களைக் கோவப்படுத்தாமல் இருப்பதற்கும் வடக்குக் கிழக்கு வரலாற்று வாழ்விடங்கள் என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியதாக டிக்சிற் அந்த நூலில் விபரிக்கிறார். ஆகவே தமிழ் நாட்டில் வாழும் தமிழர்கள் இந்தியாவின் நாகரீகமுள்ள மரபுவழிச் சமூகம் போன்று வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களுக்கும் அவ்வாறான மரபுவழிப் பண்பாடும் நாகரீகமும் உண்டு என்பதை ஏற்றுக் கொண்டவொரு நிலையில், இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்தாகவில்லை.

தமிழர்கள் இலங்கைத்தீவின் பூர்விகக் குடிகள் அதன் பின்னரே சிங்களவர்கள் குடியேறினார்கள் என்ற வரலாறு உண்டு.

கணியன் பூங்குன்றநார் சொன்னதைச் சொல்லியே பிரதமர் மோடி ஐக்கிய நாடுகள் நாடுகள் சபையில் கடந்த ஆண்டு உரையாற்றியிருக்கிறார். ஆகவே தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் பூர்விக்குடிகள் என்பதுபோல், இலங்கைத்தீவின் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களும் பூர்வீகக் குடிகள், அவர்களுக்கென்று தனித்துவமான நாகரீகம் உண்டு, மரபுகள் உண்டு. எனவே அவர்கள் வாழும் நிலத்தை அவர்களின் தாயகம் என்று அங்கீகரிக்க வேண்டுமென தமிழ்த்தேசியக் கட்சிகள் இந்தியாவிடம்  கோரிக்கை விடுக்க வேண்டும்.

13ஐ தீர்வாக ஏற்றுக்கொள்ளுங்களென அழுத்தம் கொடுக்கும் இந்தியாவிடம், தமிழ்த்தேசியக் கட்சிகள் ஏன் இதனை வலியுறுத்தக்கூடாது? தாயகக் கோட்பாடு மறுக்கப்பட்டதாலேயே, மாகாண சபைகள் அரசியல் தீர்வல்ல என்று அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக்கூட்டணி அன்றே நிகராகரித்தது. அது மாத்திரமல்ல, 2001 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மாகாணசபையை ஏற்றுக்கொள்ளவில்லை.

2004 ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியைக் கைவிட்டு மீண்டும் தமிழரசுக் கட்சியாக மாறியபோது அதன் தலைவராகச் சம்பந்தன் பதவியேற்றார். அதன்போதும் 13 ஐ அவர் நிராகரித்திருந்தார்.

குறிப்பாக 2006 ஆம் ஆண்டு அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இடைக்காலத் தீர்வு யோசனையை முக்வைத்திருந்தார். அந்தத் தீர்வு யோசனை குறித்த விவாதத்தில் தமிழரசுக் கட்சியின் சார்பிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையிலும் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சம்பந்தன், அந்தத் தீர்வு யோசனையை நிராகரித்திருந்தார். அது தமிழர்களின் சுயமரியாதைக்கு விழுந்த அடி என்றும் வர்ணித்திருந்தார்.

அத்துடன் 13 ஆவது திருத்தச் சட்டத்தை தும்புத்தடியாலும் தொட்டுக்கூடப் பார்க்க முடியாதெனவும் சம்பந்தன் கூறியிருந்தார். வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சி அதிகாரத்தை வலியுறுத்தியிருந்த சம்பந்தன், அது தமிழ் முஸ்லிம் மக்களின் தாயகம் என்றும் எடுத்தக் கூறியிருந்தார்.

13 இல் உள்ள காணி, பொலிஸ் அதிகாரிகள் உட்பட அனைத்து அதிகாரங்களையும் இலங்கை அரசாங்கம் உரிய முறையில் தாமாகவே நடைமுறைப்படுத்திச் சிங்கள மக்களின் நல்லெண்ணத்தை முதலில் வெளிப்படுத்தினால், குறைந்தபட்சம் அதில் இருந்து அரசியல் தீர்வுக்கான அடுத்த கட்ட முயற்சிகள் குறித்துப் பரிசீலிக்க முடியுமெனவும் சம்பந்தன் அந்த உரையில் பரிந்துரைத்திருந்தார்.

அதாவது  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்த இடைக்காலத் தீர்வு யோசனைகள் 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் விடக்குறைவனது என்ற தொனி சம்பந்தனின் அந்த உரையில் தென்பட்டது.

13 தீர்வல்ல எனவும் 1987 ஆம் ஆண்டே தமிழர்கள் ஏற்கொள்ளாமல் நிராகரித்தமை நியாயமானதெனவும் சந்திரிகா பண்டாரநாயக்கா 1993 ஆம் ஆண்டு மேல் மாகாண சபையின் முதலமைச்சராகப் பதவியேற்றபோது எடுத்துக் கூறியிருந்தார். 1993 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்த சந்திரிகா, 18 மாதங்களில் பிரதமராகிப் பின்னர் ஜனாதிபதியாகவும் பதவியேற்றார். 1994 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஜனாதிபதியாகப் பதவியேற்றபோதும், மாகாண சபைகளின் அதிகாரங்களை மீளமைத்துப் புதுப்பிக்க வேண்டுமென வலியுறுத்திருந்தார்.

இதே காலப்பகுதியில் பேராசிரியர் உயன்கொட தேவா. ஜெகான் பெரேரா உள்ளிட்ட சிங்களப் புத்திஜீவிகள் பலரும் 13 முழுமையான தீர்வு அல்ல என வாதிட்டிருந்தனர். தற்போது கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சராகப் பதவி வகிக்கின்ற வாசுதேவ நாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸவிதாரன போன்றோரும் 13 தீர்வல்ல எனக் கூறி தமிழர்களின் போராட்டத்தை அன்று நியாயப்படுத்தியுமிருந்தனர்.

1996 ஆம் ஆண்டு சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் முன்வைத்த தீர்வு யோசனையில், மாகாணசபைகள் பிராந்தியங்களின் ஒன்றியமாக மாற்றப்பட்டிருந்தன. இலங்கை ஒற்றையாட்சியின் (Unitary State) கீழ் இயங்கும் பிராந்தியங்கள், அதிகாரப் பரவலாக்கத்தை மாத்திரமே கொண்டிருக்குமெனவும் நிதி, நீதி. நிர்வாகம் ஆகிய மூன்று பிரதான அரச துறைகளும் கொழும்பில் இயங்குமென அப்போது அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்திருந்தார்.

சந்திரிகாவின் தீவு யோசனையில் பங்காற்றியதாகக் கூறப்படும் சட்டத்தரணி நீலன் திருச்செல்வத்தை இக் கட்டுரையாளர் 1999 ஆம் ஆண்டு வீரகேசரிப் பத்திரிகைக்காக அவர் கொல்லப்படுவதற்குச் சில மாதங்களுக்கு முன்னர் நேர்காணல் செய்திருந்தார். அதிகாரப்பரவலாக்கம் செய்யப்பட்டுள்ள பிராந்தியங்களை மத்திய அரசு (கொழும்பு) கலைக்கும் அதிகாரம் கொண்டிருந்தாலும், மாகாண சபைமுறையைவிடக் கூடுதல் அதிகாரங்களைக் கொண்டிருப்பதாக அந்த நேர்காணலில் அவர் கூறியிருந்தார்.

நாடாளுமன்ற விவாதத்தின்போது தமிழ்க் கட்சிகள் வடக்குக் கிழக்குப் பிராந்தியத்தின் அதிகாரங்களை உறுதிப்படுத்துவது தொடர்பாக மேலும் இறுக்கமான யோசனைகளை முன்வைக்க வேண்டுமெனவும் நீலன் திருச்செல்வம் அன்று பரிந்துரைத்திருந்தார்.

ஆனால் அந்தத் தீர்வு யோசனையை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தீயிட்டு எரித்தார். அப்போது உரையாற்றிய வாசுதேவ நாணயக்கார, ஒற்றையாட்சியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லையெனவும் மாகாண சபைகள் என்ற பெயரை மாற்றி 13 ஆவது திருத்தச் சட்டத்தில் இருந்த ஒத்த அதிகாரங்களையே புதிய தீர்வு யோசனையில் பரிந்துரைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முன்வைத்திருந்த டிசம்பர் 19 யோசனைகளில் பரிந்துரைக்கப்பட்டிருந்த அதிகாரப் பரவலாக்கத்தின் அடிப்படைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியிருந்தார். ஆனால் டிசம்பர் 19 யோசனைகளை அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்த்திருந்ததாக ரணில் விக்கிரமசிங்க பதிலுக்குக் கூறியிருந்தார்.

19-07-1987 ஆண்டு யாழ் பல்கலைக்கழகக் கைலாசபதி அரங்கில் இடம்பெற்ற கலந்துரையாடலில் டிசம்பர் 19 யோசனைகள் தமிழ் மக்கள் சார்பிலும் நிராகரிக்கப்பட்டன. பேராசிரியர் கா.சிவத்தம்பி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில், பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை தற்போது ஓய்வுநிலைப் பேராசிரியரான அப்போதைய கலாநிதி சிற்றம்பலம் உள்ளிட்ட பலர் பங்குபற்றியிருந்தனர்.

தமிழரசுக் கட்சியைத் தூக்கி எறிந்து விட்டுத் தந்தை செல்வா உருவாக்கிய தமிழர் விடுதலைக்கூட்டணி, தமிழர்களின் அரசியல் விடுதலையை இன்று விலை பேசிவிட்டதாகச் சிற்றம்பலம் தனது உரையில் குற்றம் சுமத்தினார். இந்தச் செய்தி அன்றைய உதயன் பத்திரிகையில் முக்கியத்துவம் பெற்றிருந்தது. ஈரோஸ் இயக்கமும் டிசம்பர் 19 யோசனைகளை மற்றாக நிராகரித்திருந்தது.

ஆகவே ஒவ்வொரு காலப்பகுதியிலும் முன்வைக்கப்படும் தீர்வு யோசனைகள் எல்லாமே, இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பில் இருந்து மாறுபடாத, கொழும்பை மையமாகக் கொண்ட அதிகாரப் பரவலாக்கத்தை மாத்திரமே உள்ளடக்கியிருந்தது என்பதற்கு இவை சில உதாரணங்கள் மாத்திரமே.

எனவே 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் மீண்டும் 13 பற்றி இந்தியா மற்றும் மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் தொடர்ச்சியாக வற்புறுத்துவதற்கான காரணம் என்பது, இலங்கை அரசாங்கத்தைத் திருப்திப்படுத்தித் தமக்குரிய புவிசார் அரசியல் நலன்களை அடைவதற்காகவேயெனப் பட்டவர்த்தனமாகப் புரிகின்றது.

அது அரசுக்கு அரசு (State to State approach) என்ற அணுகுமுறை என்று கூறினாலும், தேசிய இனம் ஒன்று தேசமாக நின்று தமது சுயநிர்ணய உரிமையைத் தொடர்ச்சியாக வலியுறுத்தினால், புவிசார் நலன்களுக்காகவேணும் வெளியுலகம் அதனைப் பரிசீலிக்கும் சாத்தியம் உண்டு.

ஆனால் தமிழ்த்தேசியக் கட்சிகள் 13 பற்றி அதுவும் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான பதினொரு ஆண்டுகள் கடந்து விட்டதொரு சூழலில், பேச முற்படுவது பட்டறிவற்ற தன்மை என்பதையே வெளிப்படுத்துகின்றது. அப்படிப் பேசுவதாக இருந்தால் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகள்தான் என்ன?

சம்பந்தன் 2006 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியதுபோன்று முதலில் சிங்கள ஆட்சியாளர்கள் 13 ஐ அமுல்படுத்த வேண்டும். ராஜபக்சக்கள் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன அரசாங்கம் மாத்திரமல்ல. சஜித், ரணில் மற்றும் ஜே.வி.பி போன்ற கட்சிகளும் இணைந்து 13 ஐ செம்மைப்படுத்த வேண்டும். அதற்கு இந்தியா பொறுப்பு நிற்க வேண்டுமெனத் தமிழ்த்தேசியக் கட்சிகள் கூட்டாக வலியுறுத்த வேண்டும்.

அதாவது 13 பற்றிய தமது மனட்சாட்சியை முதலில் சிங்கள ஆட்சியாளர்கள் வெளிப்படுத்த வேண்டும் என்ற நிபந்தனைகள் முன்வைக்கப்பட வேண்டும். அந்த நிபந்தணைகள் மிகவும் குறுகியகால எல்லையைக் கொண்டிருப்பதும் அவசியம்.

சென்ற ஜெனீவா தீர்மானத்தில் 13 பற்றிச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால் அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா ஏன் பதுங்கியது என்ற கேள்விகளும் உண்டு. நல்லாட்சியெனத் தம்மைத்தாமே மார்தட்டிக் கொண்டு 2015 இல் ஆட்சிக்கு வந்த ரணில்-மைத்திரி அரசாங்கமே 13 பற்றி எதுவும் பேசாத சூழலில், ராஜபக்ச அரசாங்கத்தில் அது பற்றி ஏன் இந்தியா அதிகம் பேசுகின்றது என்ற சந்தேகங்களும் இல்லாமலில்லை.

13 இல் இருந்த முக்கிய அதிகாரங்கள் மைத்திரி- ரணில் ஆட்சியில்தான் கொழும்பு நிர்வாகத்துக்கு மாற்றப்பட்டது என்ற கசப்பான உண்மைகளையும் முதலில் தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் 2015 மார்ச் மாத ஜெனீவா தீர்மானத்தில் 13 அரசியல் தீர்வென வலியுறுத்தப்பட்டிருந்தது.

அதற்கு ரணில் அரசாங்கம் இணை அணுசரனை வழங்கியதோடு, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பும் வழங்கியிருந்தது.

இதன் பின்னணியில் இன அழிப்புக் குறித்த விசாரணையை ஏற்று, வடக்குக் கிழக்குத் தாயகம் என்பதையும் வெளிப்படையாக அங்கீகரிக்கக்கூடிய தற்துணிவு இந்தியாவிடம் உள்ளதா இல்லையா என்பதைவிட, இந்தியாவிடம் அவ்வாறு கோரக்கூடிய துணிவும் சுயமரியாதையும் மற்றும் நேர்மையும் தமிழரசுக் கட்சி, ரெலோ. புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகளுக்கு இருக்க வேண்டிய அவசியமான காலகட்டமிது.

Leave A Reply

Your email address will not be published.