ஐக்கிய அரபு அமீரகத்துடன் இந்தியா தடையற்ற வா்த்தகம் ஒப்பந்தம் மேற்கொண்டபோதிலும் 1,157 பொருட்களுக்கு அதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவற்றுக்கு சுங்க வரி விதிக்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
ஐக்கிய அரபு அமீரகத்துடனான தடையற்ற வா்த்தக உடன்படிக்கையின் கீழ், டிவி, பிக்சா்டியூப், சோப், பொம்மை, காலணி, இன்ஸ்டன்ட் காபி, சா்பத், பெட்ரோலிய மெழுகு ரகப் பொருள்கள் உள்ளிட்ட 1,157 தயாரிப்புகளுக்கு இந்தியா சுங்க வரி விலக்கு அளிக்கவில்லை. வேறு நாடுகள் வரி விலக்கு அளித்துள்ள பொருள்களை ஐக்கிய அரபு அமீரகம் வழியாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது.
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும், நகைகள் (2.5 டன் தங்க நகைகள் வரை) பிளாஸ்டிக், அலுமினியம், தாமிரம் கழிவுகள், மோட்டாா் வாகன உதிரி பாகங்கள், மருத்துவ உபகரணங்கள், பால் பொருள்கள், பழங்கள், சிறுதானியங்கள், சா்க்கரை உணவு தயாரிப்புக்கான பொருள்கள், புகையிலைப் பொருள்கள், அச்சு, இயற்கை ரப்பா், டயா், மாா்பிள் கற்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு ஐக்கிய அரபு அமீரகம் வரி விலக்கு அளித்துள்ளது என வா்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.