Developed by - Tamilosai
எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் அரச மற்றும் தனியார் பிரிவு ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுக்க வேண்டும் என தேசிய தொழிற்சங்க மையத்தின் தலைவர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
அந்த மையத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்;
‘எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தில் 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது என நாம் அரசாங்கத்திற்குத் தெரிவிக்கிறோம்.
அரச பிரிவினருக்கும், தனியார் பிரிவினருக்கும் மற்றும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் இந்த 10 ஆயிரம் ரூபாய் சம்பள அதிகரிப்பு கட்டாயமாக வழங்கப்பட வேண்டும்.
அதேபோல் தற்போது பணியில் இல்லாத ஓய்வூதியத்தில் தமது வாழ்க்கையை கொண்டு செல்லும் ஓய்வூதியகாரர்களுக்கும் இந்தச் சம்பள அதிகரிப்பு அத்தியாவசியமாகும்.
இன்றிலிருந்து வரவு -செலவுத் திட்டம் வரை 10 ஆயிரம் கிடைக்கும் என உறுதியளிக்கும் வரை தொடர்ச்சியான எதிர்ப்பு நடவடிக்கை ஒன்றை நாடு பூராகவும் முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையடித்தவற்றை கொண்டு வந்தாவது தாம் பல்வேறு வழிகளில் சேர்த்த சொத்துக்களை அரசுடமையாக்கியாவது, எதிர்வரும் 2, 3, 4 வருடங்கள் அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்றால் ஆட்சியாளர்களுக்கு இந்தக் கோரிக்கையை கட்டாயம் நிறைவேற்ற வேண்டி ஏற்படும்’- என்றார்.