தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம்

0 48

அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கியுள்ளதன் மூலம் இலங்கை கிரிக்கெட் சபையில் அரசியல் தலையீடுகள் குறையும் என்பதை மறைமுகமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உணர்த்தியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

விளையாட்டுத்துறை அமைச்சராக பணியாற்றிய ரொஷன் ரணசிங்கவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அதிரடியாக அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கியிருந்தார்.

2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி படுதோல்வியடைந்த நிலையில் விளையாட்டுத்துறை அமைச்சரான ரொஷன் ரணசிங்க இலங்கை கிரிக்கெட் சபை அதிரடியாக கலைத்துடன், இடைக்கால நிர்வாகக் குழுவொன்றையும் நியமித்தார்.

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான 7 பேர் கொண்ட இடைக்கால குழுவை அவர் நியமித்திருந்த நிலையில், அதனை எதிர்த்து கிரிக்கெட் சபையின் தலைவராக இருந்த ஷம்மி சில்வா நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த விசாரணையில் கிரிக்கெட் சபை கலைக்கப்படும் உத்தரவுக்கு இரண்டு வாரங்கள் இடைக்காலத் தடை விதித்தது நீதிமன்றம்.

இதனிடையே, இலங்கை கிரிக்கெட் சபையில் அரசியல் தலையீடுகள் இருப்பதாகக் கூறி இலங்கை கிரிக்கெட் சபைக்கு இடைக்காலத் தடை விதித்தது சர்வதேச கிரிக்கெட் பேரவை ஐசிசி. மேலும், இலங்கையில் நடைபெற இருந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணப் போட்டியையும் தென்னாப்பிரிக்காவில் நடத்த உத்தரவிட்டது ஐசிசி.

இந்நிலையில், இடைக்காலக் நிர்வாகக் குழுவை கலைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டார். ஆனால், இதற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க மறுப்புத் தெரிவித்த நிலையில் அவரைப் பதவியில் இருந்து நீக்கியுள்ளார் ஜனாதிபதி.

இதன்மூலம், இலங்கை கிரிக்கெட் சபையில் அரசியல் தலையீடுகள் குறையும் என்பதை மறைமுகமாக ஜனாதிபதி உணர்த்தியுள்ளதாக கருதப்படுகிறது. இருப்பினும், இதனை ஜனாதிபதி வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை.

ஆனால், ஜனாதிபதியின் இந்த முடிவு, இலங்கை கிரிக்கெட் சபைக்கு விதிக்கப்பட்ட தடை முடிவை ஐசிசி திரும்பப் பெற வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.