தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ஹிட்லரைப் போன்று செயற்படுகிறாரா கோட்டாபய ?-சாணக்கியன்

0 236

ஹிட்லரைப் போன்று சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய செயற்படுவதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அதாவது,  ஹிட்லர் தனது கடைசி காலத்தில் ஜேர்மனியர்கள் எத்தனைப் பேர் இறந்தாலும் பரவாயில்லை என்று தனது கொள்கையை செயற்படுத்தி வந்தார். அதேபோன்று தான் கோட்டாபய ராஜபக்ஷவும் செயற்பட்டு வருகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

சாணக்கியனுக்கு கொரோனாத் தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தலில் இருந்த போது சமூகவலைத்தளத்தில், ஹிட்லரைப் போன்று  கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி செய்ய வேண்டும் என ஒருசிலர் கூறியிருந்ததை அவதானித்ததாகவும், உண்மையில், இன்று ஹிட்லரைப் போன்றுதான் கோட்டாபய ஆட்சி நடத்தி வருகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இன்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத்தெரிவித்த அவர், 

அரச தலைவருக்கு நெருக்கமானவர்கள் ஒவ்வொருவராக வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார்கள். இன்று நாட்டில் நீதிக்கு என்ன நடந்தது எனும் கேள்வி எழுந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்று பொருளாதார யுத்தம் ஒன்று இடம்பெற்று வருகிறது. இதில் கோட்டாபய உள்ளிட்ட பொதுஜன பெரமுனவினர் தோல்வியடைந்து வருகிறார்கள். எனவே, இனியும் மக்களை துன்பத்துக்கு உள்ளாக்க வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கிறோம்.

கொரோனாவினால் பல உயிர்களை நாம் இழந்துவிட்டோம். இந்த நிலையில் உணவின்றியும் மக்களின் உயிர்களை பறிக்க வேண்டாம் என நாம்  கேட்டுக் கொள்கிறோம். இதேவேளை இன்று நாட்டில் சுகாதார பணியாளர்களின் வேலை நிறுத்தம் நடைபெறும் அதேநேரம், பொது வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலில் விமர்சனத்தை நேர்மறையாக கையாள வேண்டும். இவ்வாறு செயற்படுவதன் ஊடாக மட்டுமே சர்வதேசத்துடன் நட்புறவுடன் நாம் பயணிக்க முடியும். அதுமட்டுமன்றி சர்வதேசத்துடன் எவ்வாறு கதைப்பதென்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள் எனவும்  தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கம் சரியான பாதையில் பயணித்தால் நாமும் அதற்கு ஒத்துழைக்க தயாராகவே இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி பொருளாதாரத்தை முன்னேற்ற முடியாத தரப்பிடம் இந்த நாடு இன்று சிக்குண்டுள்ளது எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

அதுமட்டுமன்றி கருப்புப் பணத்தைக் கொண்டு வடகொரியாவிடமிருந்து ஆயுதம் வாங்கியதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சரியாயின் இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக விசாரணையை ஆரம்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வடகொரியா என்பது பொருளாதாரத் தடைக்குட்பட்ட நாடாகும். இந்த நாட்டிலிருந்து எவ்வாறு கருப்புப் பணத்தை கொடுத்து ஆயுதம் வாங்க முடியும்? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.