தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வேலைநிறுத்தப் போராட்டத்தின் செய்தியை அரசாங்கம் புரிந்துகொள்ளத் தவறினால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – சுகாதாரத்துறை

0 429

இலங்கையில் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காது, அரச தலைவர், பிரதமர் மற்றும் அவர்கள் தலைமையிலான அரசாங்கம் தொடர்ந்தும் பதவியில் நீடிக்கின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஆயிரத்திற்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தப் போராட்டத்தின் செய்தியை அரசாங்கம் புரிந்துகொள்ளத் தவறினால் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் எனவும் சுகாதாரத்துறை சார்ந்த வல்லுநர்களின் நிறுவக ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் எச்சரித்துள்ளார்.

இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் இன்று மேற்கொள்ளப்படும் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம், தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல் அல்லவெனவும், நாட்டின் பிரஜைகள் நீண்டகாலமாக போராட்டத்தில் ஈடுபட்டுவருவதாகவும் ரவி குமுதேஷ் கூறியுள்ளார்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் தோல்வியுற்ற தலைமைத்துவம் மற்றும் பிரதமரின் பல குறைபாடுகள் காரணமாக நாடு கடுமையான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக சுகாதாரத்துறை சார்ந்த வல்லுநர்களின் நிறுவக ஒருங்கிணைப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாம் உடற்தகுதியுடன் இருப்பதாக பிரதமர் கூறினாலும், அவரின் செயற்பாடுகள் நாட்டின் அந்தஸ்தை சிதைத்துவிட்டதாக ரவி குமுதேஷ் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை சரியான பாதையில் வழிநடத்துவதற்கே அரச தலைவர், பிரதமர் மற்றும் அவர்கள் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலக கோருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, தொழிற்சங்கங்கள் ஒன்று திரள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்று 1,000 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் குமுதேஷ் தெரிவித்தார் .

தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்று பணியிடங்களில் கறுப்புக் கொடி ஏற்றுவார்கள் என்றும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோர் பணிக்கு செல்லும்போது கறுப்பு உடை அணிந்து செல்வார்கள் என்றும் ரவி குமுதேஷ் மேலும் கூறினார்.

வேலைநிறுத்தத்தை காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டமாக மாற்றுவதற்கு தாம் நிர்ப்பந்திக்கப்படும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம் என்றும், அரசாங்கம் உடனடியாக பதவிவிலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த இலக்கை அடைய எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தனிநபர்களும் ஒன்று திரள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

மக்கள் கோரும் முடிவுகள் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று கூறிய குமுதேஷ், மே மாதம் 6 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஹர்த்தாலில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளார். 

Leave A Reply

Your email address will not be published.