தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வீடு வீடாகத் திரியும் வவுனியா பொலிஸார்

0 156

மாவீரர் வாரத்தை நினைவு கூருவதற்கு பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமைய வவுனியா நீதிமன்றால் விதிக்கப்பட்ட தடை உத்தரவுக் கட்டளையைக் உரியவர்களுக்கு வழங்குவதற்காக சரியான முகவரிகள் இன்றி வவுனியா பொலிஸார் வீடு வீடாகச் சென்று வருகின்றனர்.

வவுனியா பொலிஸ் நிலைய பிரிவுக்குள் 20.11.2021 தொடக்கம் 29.11.2021 வரை மாவீரர் நாளை நினைவு கூருவதற்கு வவுனியா தலைமையகப் பொலிஸாரால் வவுனியா நீதிமன்றில் தடை உத்தரவு கோரி மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 

அதனை ஆராய்ந்த மன்று குறித்த நிகழ்விற்குத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளதுடன், பொலிஸாரால் பெயர் குறிப்பிடப்பட்ட 8 பேருக்கும் தடை உத்தரவுக் கட்டளையை வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் முன்னான் அரசியல் கைதியான செல்வநாயகம் அரவிந்தன், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி கா.ஜெயவனிதா, காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கச் செயலாளர் கோ.ராஜ்குமார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், முன்னாள் வடமாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உப தலைவர் சி.கஜேந்திரகுமார், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கிய செயற்பாட்டாளர் சு.தவபாலன் ஆகியோருக்கு குறித்த தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதில் பெயர் குறிப்பிட்ட சிலரது முகவரிகள் தவறாகப் பொலிஸாரால் வழங்கப்பட்டுள்ளமையால் குறித்த நபர்களைத் தேடி வவுனியா பொலிஸார் வீடு வீடாகத் திரிந்து வருகின்றனர். 

தொலைபேசி அழைப்பெடுத்து அவர்கள் நிற்கும் இடங்களுக்கு சென்று குறித்த தடை உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, குறித்த தடை உத்தரவில் தமது பெயர்கள் இருக்கின்ற போதும் முகவரிகள் பிழையாக உள்ளதாகவும், பொலிஸாரால் வழங்கப்பட்ட கட்டளையில் தமிழ் எழுத்து பிழைகள் அதிகமாக உள்ளதாகவும் தடை உத்தரவைப் பெற்றவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.