தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விவசாயிகளுக்கு உடனடியாக இரசாயன உரம் வேண்டும்: மன்னாரில் இன்று மாபெரும் போராட்டம்

0 73

விவசாயிகளுக்கு உடனடியாக இரசாயன உரத்தை வழங்கக் கோரியும், அரசாங்கத்தின் திட்டமிடாத நடவடிக்கையைக் கண்டித்தும் இன்று திங்கட்கிழமை  காலை 10.30 மணியளவில் மன்னார் – மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் பகுதியில் கண்டனப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 174 கமக்கார அமைப்புக்களை உள்ளடக்கிய மன்னார் மாவட்ட விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த கண்டனப் போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் உயிலங்குளம் சந்தியில் ஆரம்பமான இந்த ஊர்வலம்  உயிலங்குளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையம் வரை இடம்பெற்றது.

குறித்த ஊர்வலத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோ நோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபை முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன், நானாட்டான் பிரதேச சபையின் தவிசாளர் திருச்செல்வம் பரஞ்சோதி, உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமக்கார அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கண்டனப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.

அரசாங்கத்தின் திட்டமிடாத நடவடிக்கையைக் கண்டித்து விவசாயிகள் கோஷம் எழுப்பியதோடு அரசாங்கம் உடனடியாக இரசாயன உரத்தை விவசாயிகளுக்கு வழங்கக் கோரிக்கை முன்வைத்தனர்.

உயிலங்குளம் கமநல சேவைகள் நிலையத்திற்கு முன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் ஒன்று கூடினர். இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம், ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய மகஜர் வாசிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

இதன்போது மகஜரை பெற்றுக்கொண்ட அரசாங்க அதிபர்,  குறித்த மகஜரை ஜனாதிபதிக்கு உடனடியாகக் கையளிப்பதாகவும், எமது விவசாயிகள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்தவர்கள். பல்வேறு அழிவுகளுக்கு முகம் கொடுத்தும் சோர்ந்து போகாமல் தமது விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனினும் எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளர்ந்து போகாமல் தலைநிமிர்ந்து நிற்பார்கள் எனத் தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.