தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விவசாயிகளின் பிரச்சினைகளைத் தெரியப்படுத்துவது அதிகாரிகளின் பொறுப்பு: ஜனாதிபதி

0 186

விவசாயிகள் முகங்கொடுக்கும் அசௌகரிங்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம், எதிர்பார்க்கும் இலக்கை நோக்கிப் பயணிக்க முடியும்.

எனவே, விவசாயிகளைச் சந்தித்து விடயங்களைத் தெளிவுபடுத்துவது மிகவும் முக்கியமாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரதான பிரச்சினையை அடையாளங்கண்டு, அது தொடர்பாக அரசாங்கத்தை அறிவுறுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கமநலச் சேவைகள் உத்தியோகத்தர்களுடன் காணொலி தொழில்நுட்பத்தின் ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுற்றாடலையும் பொதுமக்களின் சுகாதாரத்தையும் பாதுகாப்பதுடன், அதிக இலாபத்தை விவசாயிகளுக்குப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முக்கிய எதிர்பார்ப்பாகும்.

ஒரு போகம், இரு போகத்துக்கு மாத்திரமன்றி, பல சந்ததியினர் பயன்பெறச் செய்வதே பசுமை விவசாயத்தின் இலக்காகும்.

எனவே, விவசாயிகள் முகங்கொடுக்கும் பிரதான பிரச்சினைகளை அடையாளங்கண்டு, அது தொடர்பாக அரசாங்கத்தை அறிவுறுத்துவது அதிகாரிகளின் பொறுப்பாகும்.

அவ்வாறு அறிவுறுத்தப்பட்டால் தான் அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விசேட ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

தவறான விடயம் ஒன்றை செய்யுமாறு நான் எவரிடமும் எப்போதும் கூறமாட்டேன். பசுமை விவசாயத்தில் ஈடுபடுவதால், பயிரிடப்படும் நில அளவை குறைக்க இடமளிக்க முடியாது.

சேதனப் பசளை பயன்பாட்டுடன்  முன்னோக்கிப் பயணிப்பதற்கான விவசாயிகளை ஊக்கப்படுத்துவது, நாட்டுக்கான அனைவரதும் பொறுப்பாகும்.

உலகம் ஏற்றுக்கொண்டுள்ள உயர் சுற்றாடல் பாதுகாப்புடன் கூடிய உரத்தை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, நைட்ரஜன் உரத்துடன் திரவ நைட்ரஜனைப் பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

நனோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட இந்தத் திரவ உரத்தில் உள்ள நைட்ரஜன் கூறு, இலைகளின் மூலம் நேரடியாக உள்ளீர்க்கப்படும்.

அந்தத் திரவ நைட்ரஜனை எதிர்காலத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

Leave A Reply

Your email address will not be published.