தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விளாடிமிர் புடினுடைய இந்திய விஜயமும் பூகோள அரசியலில் ஏற்பட்டுள்ள அதிர்ச்சியும்

0 194

இந்திய – சோவியத் உறவின் நீட்சியாக ரஷ்சியாவுடனான நெருக்கத்தை அதிகம் கொண்டிருகின்றது.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) இந்தியாவுக்கு 06.12.2021அன்று விஜயம் செய்திருந்தார். அவரது வருகை மூலோபாய உறவினை பலப்படுத்துவதாக அமைந்திருந்தது.

உலக ஒழுங்கில் ஏற்பட்டு வரும் குழப்பமும், இந்தியா – ரஷ்சியா ஆகிய நாடுகளின் எழுச்சியும் அவரது இந்திய விஜயத்தை அதிக தந்திரோபாயமிக்கதாக பேச வைத்துள்ளது.

வரலாற்று ரீதியாக இந்தியாவுக்கும், சோவியத்திற்கும் இடையில் பாதுகாப்பு உடன்பாடு இந்திரா காந்தி காலத்தில் மேற்கொள்ளப்பட்டது.

அக்காலத்திலிருந்து இந்தியா தனது அணிசேராமை எனும் கொள்கையை கைவிட்டதுடன், சோவியத் சார்பு நிலைக்குள் நகர்ந்தது. பங்களாதேஷ் பிரிவினை மட்டுமன்றி எல்லை போர்களையும், இராணுவ வலிமையையும் சோவியத்தின் ஒத்துழைப்புடன் பலப்படுத்திக் கொண்டது.

ஏறக்குறைய ஒரு பிராந்திய வல்லரசாக இந்தியா எழுச்சியடைவதற்கு ரஷ்சியாவுடனான இராணுவ ஒத்துழைப்பே பிரதான காரணமாக அமைந்திருந்தது.

இக்கட்டுரையும் விளாடிமிர் புடினது இந்திய விஜயம் ஏற்படுத்தியுள்ள பிராந்திய சர்வதேச அரசியலை தேடுவதாக உள்ளது.

விளாடிமிர் புடினுடைய இந்திய விஜயம் இரு நாட்டுக்குமான இராணுவ உறவில் அதிகமான முக்கியத்துவத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, அமெரிக்காவோடு நரேந்திர மோடி அரசாங்கம் பின்பற்றிய 2102 உரையாடலை ரஷ்யாவுடனும் நிகழ்த்தியிருந்தார்.

இரு நாடுகளதும் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களும் உரையாடியது மட்டுமன்றி உத்தர பிரதேசத்தில் குறுந்தூர தாக்குதல் ஆயுதங்களை யுமு203 தயாரிப்பதற்கான 6.66 மில்லியன் அமெரிக்க டொலருக்கு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.

இதுமட்டுமன்றி இருநாட்டு கடற்படை ஒத்துழைப்பை அதிகரிக்கும் விதத்திலும், இந்தியாவின் பாதுகாப்பு வலுவை ஆயுத ரீதியாக அதிகரிப்பதற்குமான புரிந்துணர்வு ரீதியிலான உடன்பாடுகளை இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

ஏறக்குறைய 10இற்கும் மேற்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைகள் இருநாட்டு தலைவர்களும் மேற்கொண்டுள்ளனர். அவற்றில் அநேகமானவை ஆயுத உற்பத்தியுடனேயே தொடர்புறுகிறது.

அமெரிக்காவின் எச்சரிக்கையையும் கடந்து இந்தியா – ரஷ்யா தயாரிப்பான எஸ்-400வகை ஏவுகணைகளை கொள்வனவு செய்ய உடன்பட்டுள்ளது.

இதுமட்டுமன்றி இந்தியாவும், ரஷ்யாவும் பிராந்திய சர்வதேச விடயங்களில் வெளிவிவகாரம் பொறுத்து அதிக சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.

இதனை சரிசெய்வதற்கான உரையாடலையும் இருநாட்டு தலைவர்கள் மேற்கொண்டுள்ளதுடன், தென்னாசியா மற்றும் மேற்காசியாவில் நிகழும் நெருக்கடிகள் பற்றியும் உரையாடியுள்ளனர்.

இவற்றை முதன்மைப்படுத்தி கொண்டு ஆப்கானிஸ்தான் விவகாரத்தையும் சுமுகமாக கையாளும் விதத்தில் இந்தியாவும், ரஷ்யாவும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் உரையாடலில் கவனம் செலுத்தினர்.

இவற்றை அவதானிக்கும் போது இரு நாடுகளுக்குமிடையில் வலுவான நட்புறவுக்கான அடித்தளமும், அதற்கான அணுகுமுறையும் தீவிரமாக நிகழ்ந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

ரஷ்யாவின் ஆயுதங்களையும், இராணுவ ரீதியிலான தளபாடங்களையும் அதிகமாக கொண்டிருக்கும் இந்தியா – ரஷ்யாவுடன் ஏற்படும் நெருக்கம் மீளவும் ஒரு நெருக்கடிமிக்க சூழலை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புச் சார்ந்து சீனா மட்டுமன்றி அமெரிக்க உட்பட மேற்கு நாடுகளும் உரையாட ஆரம்பித்துள்ளது. அத்தகைய உரையாடலின் தாக்கம் எத்தகையதாக அமையுமென்பதை ஆழமாக அவதானித்தல் அவசியம்.

முதலாவது, பனிப்போரின் பின்னரான காலப்பகுதியில் இந்திய அமெரிக்க கூட்டு வலுவானவொரு அரசியல் களத்தை பூகோள அரசியலில் ஏற்படுத்தி வருகிறது. இதன் பிரதிபலிப்புக்களை இந்தோ – பசுபிக் உபாயத்திலும் குவாட்- 01, 02 பொறிமுறையிலும் அடையாளம் காண முடிகின்றது.

சீனாவுக்கு எதிரான அணியொன்று அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்தியாவால் தெளிவாக வரையறுக்கப்பட்டள்ளது. அதில் ஜப்பான், அவுஸ்ரேலியா, தென்கொரியா போன்ற நாடுகளும் இணைந்து பயணிக்க முயலுகின்றது.

இத்தகைய நாடுகளின் கட்டமைப்பை நேட்டோ – 02 என அழைக்கும் ஆய்வாளர்களும், ஆய்வுகளும் வெளிவந்துள்ளது. குவாட் – 01, 02 என்பன நோட்டோ – 02இன் ஆரம்ப முயற்சியாகவே அத்தகைய பதிவுகள் உறுதிப்படுத்துகிறது.

இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் 2102 உரையாடலை அமெரிக்காவுடன் செயற்படுத்தி வரும் இந்தியா பொருளாதார ரீதியிலும் அதிகம் அமெரிக்காவுடனும், ஐரோப்பிய நாடுகளுடனும் தங்கியிருக்க முயன்றது.

இவ்வகை போக்கு கொவிட் தொற்றுக்கு பின்னர் அதீதமாக வளர்ச்சியடைந்ததுடன், சீனாவுக்கு எதிரான அணியொன்றையும் கட்டமைத்து அதனூடாக இந்திய மேற்கு உறவு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதை அரசியல் பொருளாதார இராணுவ கட்டமைப்பு என்பதை விட அதையும் கடந்து இந்தியாவின் ஒவ்வொரு நகர்விலும் மேற்கு மற்றும் அமெரிக்காவின் கரிசணையும், ஈடுபாடும், செல்வாக்கும், ஆதிக்கமும் அதிகரிக்க தொடங்கியது.

இந்தியாவின் எல்லைக்குள் அமெரிக்காவின் பிரவேசம் என்பது சாதாரணமொன்றாக மாறியுள்ளது. ட்ரம்ப் – மோடி சந்திப்புக்கள் அதனையே வெளிப்படுத்தியிருந்தது. ஆனால் புதிய ஜனாதிபதி பைடன் சற்று விலகியிருந்தாலும், அமெரிக்க வெளிவிவகாரம், பாதுகாப்பு மற்றும் இராணுவ நடவடிக்கைகள் இந்திய எல்லைக்குள் அதீத வளர்ச்சியை அடைந்துள்ளது.

ஏறக்குறைய முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் காலப்பகுதியை அப்படியே தொடர்ந்து பின்பற்றி வருகிறார். இரண்டாவது, இந்தியா – ரஷ்யா நட்பானது நீண்ட வரலாற்றை கொண்டது முன்னாள் சோவியத் யூனியன் காலப்பகுதியிலிருந்து அத்தகைய பிணைப்பு வலுவானதாக உள்ளது.

அதிலும் குறிப்பாக, இந்தியாவில் உள்ள ஆயுத தளபாடங்கள், விமானங்கள், நீர்மூழ்கிககள், உலங்குவானூர்திகள், போர்க்கப்பல்கள் மட்டுமன்றி சிறிய ரக ஆயுதங்களும், போக்குவரத்து சாதனங்களும் ரஷ்யாவினுடையதாகவே காணப்படுகிறது.

ரஷ்சியாவின் மிகப்பெரிய ஆயுதக்கொள்வனவு நாடாக ரஷ்யா விளங்குகின்றது. அத்தோடு இந்தியாவின் ஆயுத ஏற்றுமதிகளையும், உள்நாட்டு ஆயுத உற்பத்திகளையும் மேற்கொள்வதற்கான தொழில்நுட்பம், அதற்கான மூலப்பொருட்கள் ரஷ்யாவிடமிருந்தே இந்தியா பெறுகிறது.

இந்தியா உலகில் உள்ள 84 நாடுகளில் ஆயுத ஏற்றுமதியை செய்வதுடன் 5.5 பில்லியன் அமெரிக்க டொலரை அத்தகைய ஏற்றுமதியால் பெறுகிறது.

இத்தகைய நெருக்கமான உறவை கொண்டிருக்கும் இருநாடுகளும் மக்கள் தொகையாலும் நிலப்பரப்பாலும் வலுவான தேசங்களாக காணப்படுகிறது. இவற்றினுடைய இணைவு என்பது மூலோபாயரீதியில் முக்கியமானது என்பதும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளுக்கும், சீனாவுக்குமானது என்பது கவனத்திற்குரியது.

மூன்றாவது, ரஷ்யா – இந்தியா மூலோபாய நட்புறவு வலுவடைவதன் மூலம் உடனடியான பாதிப்பை ஐரோப்பாவும், அமெரிக்காவும் அதன் அணி நாடுகளுமே எதிர்கொள்பவையாக அமையும்.

படிப்படியாக அமெரிக்கா தனது ஆயுத தளபாடங்களை இந்தியாவுக்குள் குவிப்பதற்கும் மீண்டுமொரு சீன – இந்திய யுத்தத்தை உருவாக்க முயற்சிக்கின்ற போது சீன அணியோடு பயணிக்கும் ரஷ்சியாவுடனான இந்தியா ஒத்துழைப்பு வலுவடையுமாயின் இராணுவ ரீதியில் மட்டுமன்றி அரசியல், பொருளாதார ரீதியிலும் அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆபத்தானதாக அமையும்.

சீனாவை பொறுத்தவரை ரஷ்யாவுடன் ஒத்தழைத்த மேற்கை எதிர்த்தாலும் சீனா எண்ணிக்கொண்டதன்படி மேற்கு தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் தனது பிரதான எதிரிகளாக இந்தியா மற்றும் ரஷ்யாவையே கருதும். ஆனால் மேற்கை தோற்கடிக்கும் வரை அத்தகைய முரண்பாட்டை அது சுமுகமாகவே கையாள முயலும்.

புடினுக்கு பின்னான ரஷ்யா, சீனாவின் செல்வாக்கு மண்டலமாக அமையுமாயின் இந்தியாவோடு மோதுவதே சீனாவின் பிரதான உத்தியாக இருக்கும். இதனால் சீனா சமகாலத்தில் இந்தியாவையும், ரஷ்சியாவையும் சுமுகமாகவே கையாள முயலும்.

நான்காவது, இச்சூழலிலேயே ரஷ்யா ஜனாதிபதியின் இந்திய விஜயம் நிறைவு பெறுகின்ற போது இந்தியாவின் முப்படைத்தளபதி பிபின் ராவத் தமிழகத்தில் ரஷ்சியா தயாரிப்பு உலங்கு வானுர்தியான எம்-17இல் பயணிக்கையில் கொல்லப்பட்டுள்ளார். அத்தகைய கொலைக்கு சரியான காரணத்தை இந்திய தரப்பு இதுவரை வழங்கவில்லை.

இந்திரா காந்தியின் மரணத்துக்கும் இந்திய மத்திய அரசு இதுவரை யார் காரணமென்று தெரிவிக்கவில்லை. அப்படுகொலை எத்தரப்பால் மெற்கொள்ளப்பட்டது என்பதை படுகொலையின் நகர்வுகளை வைத்துக்கொண்டு அடையாளங்காண முடிந்தது.

அத்தகைய சூழலில் இந்தியாவின் முப்படை தளபதி கொல்லப்பட்டதற்கு பின்னாலுள்ள நடைமுறையும், இந்திரா காந்தியின் படுகொலைக்கு பின்னால் உள்ள நடைமுறையும் எறக்குறைய ஒன்றாகவே காணப்படுகிறது.

அதாவது ரஷ்யா – இந்தியா நெருக்கம் வலுவடைகின்ற போது வலுவான தொழில்நுட்பத்தை கொண்ட ரஷ்சியா தயாரிப்பான உலங்குவானுர்தியில் பயணம் செய்கின்ற போது முப்படை தளபதி கொல்லப்பட்டுள்ளார்.

எனவே, மூலோபாயரீதியிலான ரஷ்சியா – இந்தியா உறவு வலுவடைவதற்கான சூழல் மீளமைக்கப்பட்டுள்ளது.இராணுவ ரீதியிலான வளர்ச்சியை நோக்கி இந்தியாவின் நகர்வு பிராந்திய சர்வதேச அரசியலில் அதிக அச்சத்தையும், கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

-பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-   

Leave A Reply

Your email address will not be published.