தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விடுதியில் இருந்து வெளியேறுமாறு மாணவர்கள் உத்தரவு

0 436

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் வி. சுரேந்திரன் மற்றும் பிரபாத் ஆகியோருடன் இணைந்த அனைத்து மாணவர்களும் விடுதியில் இருந்து இன்று திங்கட்கிழமை (02) இருந்து வெளிச்செல்லுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்து கட்டளையிட்டுள்ளது.

குறித்த பல்கலைகழகத்தில் நேற்று முதலாம் திகதியில் இருந்து எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் விடுதியில் இருந்து மாணவர்கள் வெளியேறுமாறு நிர்வாகம் அறிவித்தபோதும் மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேறாமல் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கை நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி ஜ.பி. கெனடி விடுதியில் இருந்து மாணவர்கள் வெளியேறாது, மாணவ சங்க தலைவர் வி. சுரேந்திரன் மற்றும் பிரபாத் ஆகியோர் மாணவர்களை ஒருமித்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுவருவதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவித்தார்.

இதனை அடுத்து காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமிந்த நயனசிறி குறித்த பல்கலைகழக நிறுவகத்தில் நேற்று முதலாம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல்வரையில் நிறுவகத்தில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு உள்ள விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்களை இன்று காலை 8 மணிக்கு முதல்வெளியேறுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில், விடுதியில் இருந்து மாணவர்கள் வெளியேறாது வெளியில் தங்கியிருக்கும் மாணவர்களை நிறுவக வளாகத்துக்குள் அழைத்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுவருவதுடன் ஏதாவது குற்றச் செயலும் நடக்க வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் எனவே இதனை தடுத்து நிறுத்துவதற்காக குறித்த மாணவர் சங்க தலைவர் உட்பட அனைத்து மாணவர்களை வெளிச்செல்லுமாறு தடை உத்தரவு ஒன்றை கோரினர்.

இந்நிலையில் பொலிஸார் கோரியவாறு நீதவான் தடை உத்தரவு பிறப்பித்து கட்டளையிட்டார்.

இதேவேளை ஆர்ப்பாடத்தில் ஈடுபட்ட மாணவர்கள் இந்த நீதிமன்ற தடை உத்தரவை அடுத்து அங்கிருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது

Leave A Reply

Your email address will not be published.