தமிழ் ஓசை
தமிழ் ஓசை

விசமிகளினால் தகர்த்தெறியப்பட்ட மாவீரர் துயிலும் இல்லம்

0 285

மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலும் இல்லத்தின் பிரதான சுடர் ஏற்றும் பீடம் முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளது.

இது அரச பயங்கரவாதத்தின் மிலேச்சத்தனமான செயல் என மாவீரர் துயிலுமில்ல ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டாளரும் தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவருமான  வி.எஸ் சிவகரன் (VS.Sivakaran) தெரிவித்துள்ளார்.

“நேற்று வியாழக்கிழமை மாலை தகவல் கிடைத்ததும் துயிலுமில்ல ஏற்பாட்டுக் குழுவின் பொருளாளரும் மன்னார் நகர சபை தலைவருமாகிய அன்ரனி டேவிற்சனும் நாமும் சென்று பார்வையிட்டோம்.

துயிலுமில்ல நுழைவாயிலுக்கு அருகில் இராணுவமுள்ள போது யார் உடைத்திருக்க முடியும் என்பது வெளிப்படையாகவே புலனாகின்றது.

பல வருடங்களாக இருந்த இந்தப் பொதுச்சுடர் ஏற்றும் பீடத்தை சற்றும் மனிதாபிமானம் இன்றி மிலேச்சத்தனமான முறையில் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

எனவே இவ்வாறு தீபம் ஏற்றும் பீடத்தை அழிப்பதன் ஊடாக அரசாங்கம் சிற்றின்பம் அடையலாம்.

தமிழ் மக்களின் மனங்களில் அனுதினமும் தியாகச் சுடராக ஒளிர்ந்து கொண்டிருக்கும் எமது விடுதலை வீரர்களின் தியாகத்தையோ இலட்சிய வேட்கையையோ அரசாங்கத்தால் சிதைத்து விட முடியாது என்பதை இக் கேவலமான செயலில் ஈடுபடுவோர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இச்சம்பவம் மாவீரர்களின் பெற்றோர்கள் மத்தியில் மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.