Developed by - Tamilosai
வவுனியாவில் இடம்பெறும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தைக் கண்டித்து எதிர்வரும் 10 ஆம் திகதி நெடுங்கேணியில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டத்தை நடத்த தமிழ்க் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
அநுராதபுரம் வடக்கின் சில கிராமங்களை எல்லை நிர்ணயம் என்ற போர்வையில் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான முனைப்பை அரசாங்கம் எடுத்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், எம். தியாகராசா, இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் வவுனியா அமைப்பாளர் ந. கருணாநிதி, தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் சார்பில் ஜி. ரி. லிங்கநாதன், மாக்ஸிச லெனினிச கட்சி பிரமுகர் இ. பிரதீபன், ஜனநாயக போராளிகள் கட்சி உறுப்பினர், வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ். தணிகாசலம் உட்பட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புப் பிரதிநிதிகள் இன்று வவுனியா வடக்கு பிரதேச சபை மண்டபத்தில் கலந்து கொண்டு குறித்த விடயம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடலின் பின்னர் எதிர்வரும் 10 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பது எனத் தீர்மானித்துள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், பொது மக்களும் கலந்துகொண்டு சிங்களக் குடியேற்றத்திற்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.