Developed by - Tamilosai
வவுனியா பூந்தோட்டம் சந்திப் பகுதியில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சமூகவிரோதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று பூந்தோட்டம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
குறிப்பாக அச்சந்தியினை பயன்படுத்தும் பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்து கொள்வதும் அங்கு இடம்பெறும் ஜனநாயக விரோதமான செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதனை நோக்கமாக் கொண்டு குறித்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் ஒன்று கூடும் ஒரு சில இளைஞர்களால் அந்தப்பகுதியை பயன்படுத்தும் பொதுமக்கள் அசௌகரியங்களை சந்திப்பதுடன், மதுபோதையில் நிற்கும் அவர்கள் பெண்களுடன் அநாகரிமான முறையில் நடந்துகொள்வதுடன், தகாத வார்த்தை பிரயோகங்களையும் பயன்படுத்துவதாக பொதுமக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.
அத்துடன் வவுனியா நகருக்கு தொழிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பலரிடம் குறித்த நபர்கள் பணத்தினை பறிப்பதாகவும், வியாபார நிலையங்களில் பொருட்களை கொள்வனவு செய்பவர்களிடம் வம்புச்சண்டை செய்வதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.
எனவே பூந்தோட்டம் சந்தி பகுதியினை பயன்படுத்தும் பொதுமக்களின் நன்மை கருதி இவ்வாறான சம்பவங்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு குறித்த கலந்துரையாடலில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
அந்த வகையில் முதற்கட்டமாக குறித்த பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நபர்கள் தொடர்பாக, வடமாகாண ஆளுநர் மற்றும், வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர், வன்னி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், மாவட்ட அரச அதிபர், ஆகியோருக்கு பொதுமக்களின் கையெழுத்தடங்கிய மகஜர் ஒன்று அனுப்புவதாக தீர்மானிக்கப்பட்டது.
குறித்த விடயத்திற்கு உரிய தரப்புக்களால் தீர்வுகள் எவையும் கிடைக்க பெறாவிடில் வர்த்தகர்கள் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து மாற்று நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
கலந்துரையாடலில் பூந்தோட்டம் வர்த்தகர்கள், பொது அமைப்புக்கள், அயல் கிராமத்தவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.