Developed by - Tamilosai
வளமான வாழ்க்கை இல்லை என்ற விரக்தியில் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமா சந்திரபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) தனியார் விடுதியில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஜனநாயக ரீதியாக ஜனாதிபதியாக்க நாங்கள் முன்வந்திருந்தாலும் சில இனவாதக் கருத்துக்கள் மற்றும் வேறுபட்ட கருத்துக்களால் இந்த நாட்டில் இந்த அரசாங்கம் ஆட்சி அமைத்துள்ளது.
வெறுமனே வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தால் மக்களாகிய நாம் துன்பங்களுக்கும் துயரங்களுக்குள்ளும் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கின்றோம்.
இந்த அரசாங்கத்திடம் ஒரு நிலையான மக்கள் நலன் பேணக்கூடிய எந்தவிதமான திட்டங்களும் இல்லை.
மக்களைச் சந்திக்க முடியாமல் மக்களின் குறைகளைத் தீர்க்க முடியாமல் மக்கள் நலன் பேண முடியாமல் தோல்வியடைந்த அரசாங்கமாகவும் தோல்வி கண்ட ஜனாதிபதியாகவும் இந்த அரசாங்கம் இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.