Developed by - Tamilosai
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவராக சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா மீண்டும் தெரிவாகியுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் தெரிவுசெய்வதற்கான அமர்வு இன்று முற்பகல் 10 மணிக்கு, நகர சபை மண்டபத்தில், வடமாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ம.பற்றிக் டி ரஞ்சன் தலைமையில் ஆரம்பமானது.
வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் கோணலிங்கம் கருணானந்தராசா, கொவிட்-19 தொற்றினால் அண்மையில் உயிரிழந்தார்.
இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்குக் கடந்த செப்டம்பர் மாதம் புதிய தலைவரைத் தெரிவுசெய்யும் நடவடிக்கை இடம்பெற்றது.
இதன்போது சுயேட்சைக் குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா, புதிய தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
எனினும் அவர் கடந்த மாதம் சமர்ப்பித்த 2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டம், இரு தடவைகள் தோற்கடிக்கப்பட்டதால், அவர் பதவியிழந்தார்.
இந்நிலையில் மீளவும் இன்று (15) தவிசாளர் தெரிவு நடைபெற்றது.
வல்வெட்டித்துறை நகர சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 7 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
சுயேட்சைக் குழு 4 உறுப்பினர்களையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி என்பன தலா 2 உறுப்பினர்களையும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி என்பன தலா ஒரு உறுப்பினரையும் கொண்டுள்ளன.
இந்நிலையில், இன்று இடம்பெற்ற புதிய தலைவர் தெரிவுக்கான வாக்கெடுப்பில், 13 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அவர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் வெளிநடப்புச் செய்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி என்பனவற்றின் உறுப்பினர்கள் சமுகமளிக்கவில்லை.
வாக்கெடுப்பில் சுயேட்சை குழுவின் உறுப்பினர் சபாரத்தினம் செல்வேந்திரா மீண்டும் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.