தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வர்த்தமானி அறிவித்தலை உடன் ரத்துச்செய்ய வேண்டும் – மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம்

0 165

தனியார் சட்டங்களை மனித உரிமைகள்சார் தரத்திற்கு அமைவாக மாற்றியமைப்பதாக இருந்தால், அதனைச் செய்வதற்கான இயலுமையும் நேர்மையுடைய பிரதிநிதிகளால் வழிநடத்தப்படுகின்ற தேர்ச்சிபெற்ற குழுவொன்று அவசியமாகும்.

இருப்பினும் தற்போது ஞானசார தேரர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய புதிய ஜனாதிபதி செயலணி அதற்கு முற்றிலும் நேர்மாறானதாகவே காணப்படுகின்றது.

எனவே செயலணி தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் உடனடியாக இரத்துச்செய்யவேண்டும் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது.

அரசியலமைப்பின் 33 ஆம் உறுப்புரையின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இலங்கைக்குள் ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற கொள்கையை செயற்படுத்தும் வரைபைத் தயாரிப்பதற்கு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் அடங்கிய விசேட ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பல்வேறு தரப்பினராலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில், புதிய செயலணி பற்றிய தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும் வகையில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கொள்கையை செயற்படுத்தும் வரைபைத் தயாரிப்பதற்காக கலகொட அத்தே ஞானசாரதேரரின் தலைமையில் புதிய ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்பட்டுள்ளமை எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதுடன் கடும் விசனத்தையும் தோற்றுவித்திருக்கின்றது.

நாடு மிகப்பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும்  சூழ்நிலையில் இச்செயலணி உருவாக்கப்பட்டிருப்பதும் மதச்சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் வன்முறைகளுடன் சம்பந்தப்பட்டிருந்த பௌத்த தேரர் அதற்குத் தலைமைதாங்குவதும் மிகுந்த கரிசனைகளைத் தோற்றுவித்துள்ளது.

அதேவேளை கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலின்போது ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ என்ற கோஷம் மேலோங்கியதுடன் அது குறிப்பாக பெரும்பான்மைவாதக்கொள்கைகளை முன்னிலைப்படுத்துவதாக அமைந்திருந்ததே தவிர, சட்டம் அனைவருக்கும் சமத்துவமான முறையில் நடைமுறைப்படுத்தப்படுவதையோ அல்லது அதன்கீழ் அனைவரும் ஒரேவிதமான பாதுகாப்பைப் பெறுவதையோ அது முன்னிலைப்படுத்தவில்லை.

சிறுபான்மையினத்தவரும் நன்மையடையக்கூடியவாறான ஓர் சட்டத்தின்கீழ் இலங்கை ஆளப்படும் சூழ்நிலையில், மேற்படி கோஷத்தை முன்வைத்தவர் பொய்யானதொரு தோற்றப்பாட்டை ஏற்படுத்தக்கூடியவகையில் இலங்கையின் சட்ட வரலாற்றையும் சட்ட முறைமையையும் வேண்டுமென்றே சிதைத்தார்.

தனியார் சட்டங்கள் உள்ளடங்கலாக இலங்கையின் சட்ட முறைமை பல்வேறு கோணங்களில் நோக்கப்படும் அதேவேளை, அவை இலங்கையின் அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைகள்சார் தரத்தைப் பூர்த்திசெய்பவையாக அமையாது.

எனவே உண்மையிலேயே இந்தச் சட்டங்களை மனித உரிமைகள்சார் தரத்திற்கு அமைவாக மாற்றியமைப்பதாக இருந்தால், அதனைச் செய்வதற்கான இயலுமையும் நேர்மையுடைய பிரதிநிதிகளால் வழிநடத்தப்படுகின்ற குழு அவசியமாகும்.

இருப்பினும் தற்போது உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய புதிய செயலணி அதற்கு முற்றிலும் நேர்மாறானதாகக் காணப்படும் நிலையில், செயலணி தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் உடனடியாக இரத்துச்செய்யவேண்டும்.

அதுமாத்திரமன்றி கலகொட அத்தே ஞானசாரதேரர் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வெறுப்புணர்வுப்பேச்சுக்களை முன்னெடுத்துவந்தவர் என்பதுடன் அதுகுறித்து விசாரணை முன்னெடுப்பதற்கோ அல்லது அவரைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கோ எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

அத்தோடு அவர் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறைத்தண்டனையையும் அனுபவித்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலைசெய்யப்பட்டார்.

எனவே நிர்வாக ரீதியில் எந்தவொரு பதவியையும் வகிப்பதற்கு அவர் முற்றிலும் தகுதியற்றவர் என்பதுடன் நாட்டின் சட்டத்தை மறுசீரமைக்கும் பணிக்குத் தலைமைதாங்கும் பொறுப்பை அவரிடம் ஒப்படைப்பது பொருத்தமற்றதுமாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.