Developed by - Tamilosai
2022 ஆம் நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இரண்டாவது வாசிப்புக்காக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவால் நாளை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
வரவு – செலவுத்திட்ட விவாதம் பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இது சுதந்திர இலங்கையின் 76ஆவது வரவு- செலவுத்திட்டமாகும்.
இந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி நிதி அமைச்சரால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
2022ஆம் நிதியாண்டுக்கான சேவைகளுக்கான செலவீனங்களுக்கு திரட்டு நிதியத்திலிருந்து மற்றும் அரசாங்கத்துக்குரிய அல்லது அதன் கையாளுகையில் உள்ள ஏனைய நிதியத்திலிருந்து பெற்றுக் கொள்வதற்கும், இலங்கைக்குள் அல்லது அதற்கு வெளியே கடன் பெற்றுக் கொள்ளல் போன்றவற்றுக்காக இந்த நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.
இதற்கமைய 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் டிசம்பர் 31ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான சேவைக்காக மதிப்பிடப்பட்டதான இரண்டாயிரத்து ஐந்நூற்று ஐந்து பில்லியன் முன்னூற்று நாற்பத்தாறு மில்லியன் ஐந்நூற்று ஐம்பத்தெட்டாயிரம் ரூபா அரசாங்கத்தின் செலவீனத்துக்குப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.