தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்துவிட்டு எங்கள் மாவட்டங்களுக்கு செல்ல முடியாது

0 70

மக்களின் எதிர்பார்ப்பில் மண்ணைப் போட்ட அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்துவிட்டு எங்கள் மாவட்டங்களுக்கு செல்ல முடியாது. அவ்வாறு ஆதரித்து எமது பகுதிகளுக்கு சென்றால்  மக்கள் எங்களை கற்களாலும் பொல்லுகளிலும் அடித்து துரத்துவார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை இடம்பெற வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான ஆறாம்நாள் விவாதத்தில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த நாடு என்றுமில்லாதவாறு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித்தவிக்கின்றது. இதிலிருந்து மீள முடியாதவாறு அனைத்து கதவுகளும் மூடப்பட்டுவிட்டன. எந்த கடவுளாலும் இந்தக் கதவுகள் திறக்கப்பட  முடியாதளவுக்கு  இறுக மூடப்பட்டுவிட்டன. இந்த நாடு இருண்ட யுகத்துக்குள் சென்று கொண்டிருக்கிறது.

வரவு செலவுத்திட்டம்  மீதான மக்களின் எதிர்பார்ப்புக்களில் மண்ணைத் தூவி விட்டு ஏமாற்றங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. ஆகவே இந்த வரவு செலவுத்திட்டத்தை ஆதரித்தால் எங்கள்  மாவட்டங்களுக்கு செல்ல முடியாது. சென்றால்  கற்களாலும் பொல்லுகளிலும் அடித்து துரத்துவார்கள்.

இதேவேளை வன்னி மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் மாவட்ட செயலகங்களில், பிரதேச செயலகங்களில் நடக்கும்  கூட்டங்களில்  அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து அங்குள்ள அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமாகவோ, ஏனைய விடயங்கள் தொடர்பாகவோ எந்த வித ஆலோசனைகளும்  நடத்தப்படுவதில்லை.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களைத் தவிர , மாவட்ட அபிவிருத்திக் கூட்டங்களைத் தவிர வேறு எவற்றுக்கும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்கப்படுவதில்லை.

ஒருங்கிணைப்புக் குழுத்தலைவர்கள்  தன்னிச்சையாக முடிவெடுத்து அரச அதிகாரிகள் மூலம்குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பி.க்கள் கலந்து கொள்ள முடியாதவாறு தடைகளை ஏற்படுத்துகின்றனர் என்றார்

Leave A Reply

Your email address will not be published.