Developed by - Tamilosai
தொல்லியல் மரபுரிமை வரலாற்றுச் சின்னங்களை எதிர்காலத்தில் பேணிப் பாதுகாப்பதற்கு புலம் பெயர்ந்து வாழும் தமிழ் உறவுகளும் ஒன்றிணைய வேண்டும். இதன்போது ஜனநாயக ரீதியாக வரலாற்றுப் பொறிமுறையிலான சின்னங்களின் பொக்கிஷங்களைப் பாதுகாக்க முடியும் என தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரம நாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய மரபுரிமைகள் அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் அமைச்சு, தொல்லியல் திணைக்களம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ். நெடுந்தீவு பகுதியில் போத்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட தொல்லியல் சின்னங்களை அழிவடைய விடாது அதனை மீண்டும் பேணிப் பாதுகாக்கும் நோக்கிலான திட்ட முன்மொழிவுகளை எடுக்கும் வகையிலான கள விஜயம் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் நேற்று இடம்பெற்றது.
இதன் போது ஊடகங்களுக்குக் கருத்துத்தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
09 புராதன சின்னங்களுக்குரிய புறாக்கூடு, ஒல்லாந்தர் கால நீதிமன்றம், வைத்தியசாலை, ஒல்லாந்தர் வெடியரசன் கோட்டை, சிவன் ஆலயம், பெருக்கு மரம், வளரும் கலங்கரை வெளிச்சம் கூடு ஆகியவற்றுக்குச் சென்று உரிய கள நிலவரங்களை இராஜாங்க அமைச்சர் தலைமையிலான குழுவினர் ஆராய்ந்தனர்.
இந்தக் கள விஜயத்தில் பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் பிரதித்தலைவரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன், தொல்லியல் திணைக்களப் பணிப்பாளர் அநுர மனுதுங்க, நெடுந்தீவு பிரதேச செயலாளர் எ.ஜெயகாந் மற்றும் தொல்லியல் திணைக்கள அலுவலகர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.