தமிழ் ஓசை
தமிழ் ஓசை

வன பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது- சிபி ரத்னாயக்க

0 403

” வன பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். வடக்கு மக்களுக்கு அநீதி ஏற்படுவதற்கு இடமளிக்கமாட்டேன்.” – என்று வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சிபி ரத்னாயக்க தெரிவித்தார்.

மகாவலி மற்றும் வன பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களின் நிலங்கள் அபகிரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சபைக்குள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பறிக்காதே, பறிக்காதே தமிழர் நிலங்களை பறிக்காதே எனவும் கோஷம் எழுப்பினர்.இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

” வன பாதுகாப்பு என்ற போர்வையில் தனியாருக்குரிய காணிகளை கையகப்படுத்த எவ்வித ஏற்பாடுகளும் இல்லை. அதற்கான பொறுப்பை நான் ஏற்கின்றேன். வடக்கில் இருந்தாலும், தெற்கில் இருந்தாலும் மலையகத்தில் வாழ்ந்தாலும் மக்கள் மக்கள்தான். எனவே, அவர்களின் இடங்களில் கைவைக்கப்படாது. சிலர் இதன்மூலம் சர்வதேசத்துக்கு சேதி சொல்ல முற்படுகின்றனர். அதற்கும் நான் இடமளிக்கமாட்டேன்.

வனஜீவராசி திணைக்களத்துக்குரிய இடங்கள் அல்லாத மக்களுக்குரிய நிலங்களை பயிர் செய்கையில் ஈடுபடுவதற்கு கையகப்படுத்த நாம் தயாரில்லை என்பதை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். நான் மன்னார் சென்றிருந்தேன். சார்ள்ஸ் எம்.பியுடன் பேச்சு நடத்தினேன். இணக்கப்பாடும் ஏற்படுத்தப்பட்டது. எனவே, என்ன நடக்கின்றது என்பது உங்களுக்கு தெரியும். வடக்கு மக்களுக்கு அநீதி ஏற்பட இடமளிக்கப்படாது.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.