Developed by - Tamilosai
வட்டவளை பகுதியில் இருவேறு வனப்பகுதிக்கு இனந்தெரியாதவர்கள் வைத்த தீயின் காரணமாக அப்பகுதியில் உள்ள சுமார் 190 குடும்பங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை இன்சரா பிரிவில் உள்ள சுமார் 200 ஏக்கர் பைனஸ் காட்டுப்பகுதிக்கு இன்று பகல் (22) திகதி இனந்தெரியாத விசமிகளால் காட்டுப்பகுதிக்கு தீ வைத்ததன் காரணமாக அந்த காட்டுப்பகுதியில் சுமார் 6 ஏக்கர் வரை தீயிக்கிரையாகியுள்ளன.
குறித்த வனப்பிரதேசத்திற்கு கீழ்பகுதியில் அமைந்துள்ள இலக்கம் 101 வீடமைப்பு திட்டத்திற்கு இந்த வனப்பகுதியிலிருந்தே குடிநீர் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
இதனால் பகுதியில் வாழும் 60 குடும்பங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுகின்றன.
இதே நேரம் வட்டவளை பகுதியில் உள்ள நீர் போசன பிரதேசத்திற்கு தீ வைத்ததன் காரணமாக அப்பகுதியில் சுமார் ஐந்து ஏக்கர் வரை எரிந்து நாசமாகியுள்ளன. வட்டவளை பகுதியில் உள்ள 130 குடும்பங்களுக்கு குறித்த பிரதேசத்திலிருந்தே குடிநீர் பெற்றுக்கொள்ளப்படுகின்றன.
இதனால் இந்த 130 குடும்பங்களுக்கும் எதிர்காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றன.
மலையகத்தில் தற்போது வரட்சியான காலநிலை காணப்படுவதனால் காடுகளுக்கு தீ வைக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. கடும் வெயிலும் காற்றும் காணப்படுவதனால் தீ மிக வேகமாக பரவி வனப்பிரதேசங்களில் பெரும்பகுதி அழிவடைகின்றன.
இதனால் நீரூற்றுக்கள் அற்றுப்போய் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதுடன் இந்த பிரதேசத்தில் உள்ள அரியவகை தாவரங்கள் மருந்து மூலிகைகள், வன விலங்குகள் போன்றன அழிவடையும் நிலை காணப்படுகின்றன.
அத்தோடு நீர் இன்மை காரணமாக காடுகளில் வாழும் கொடிய வன விலங்குகள் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு வரக்கூடிய அபாயமும் காணப்படுகின்றன.
எனவே காடுகளுக்கு தீ வைப்பவர்களை உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்