தமிழ் ஓசை
தமிழ் ஓசை

“வடக்கு – கிழக்கில் தொடரும் பொலிஸ் அராஜகங்கள்”

0 150

வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் அராஜக சம்பவங்கள் தொடர்ச்சியாகப் பதிவாகிவரும் நிலையிலும், ஏறாவூர் சம்பவத்தைப்போன்ற வலுவான காணொலி ஆதாரங்களையுடைய ஒரு சில சம்பவங்களே வெளிச்சத்திற்கு வருகின்றன என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இத்தகைய நிலைவரத்தில் மட்டக்களப்பில் கடந்த ஒருமாத காலத்தில் பதிவான பொலிஸ் அராஜகங்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் மீண்டுமொரு முறை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றேன்  என்றும் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.

 அதுமாத்திரமன்றி மட்டக்களப்பு, கருவேப்பங்கேணி பகுதியில் நேற்று மற்றுமொரு பொலிஸ் தாக்குதல் சம்பவம் பதிவாகியிருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், அதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

 மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் வெள்ளிக்கிழமை இரவு ஏறாவூர் பொலிஸ் நிலைய வீதிப்போக்குவரத்து பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் வீதியில் வைத்து மிக மோசமாகத் தாக்கப்படும் காணொலியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

இதேவேளை, ‘மட்டக்களப்பில் பொலிஸ் அராஜகம் தொடர்கின்றது, அமைச்சர் சரத் வீரசேகர அமைதிகாக்கிறார்’ என்று  குறிப்பிட்டு  பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மேற்படி காணொலியை அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.