தமிழ் ஓசை
தமிழ் ஓசை

ரஞ்சனின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு – நீதிபதிக்கு எதிரான விசாரணைக்குத் தடை!

0 136

முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல்பதிவு விவகாரத்தில், மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க மேன் முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஒரு நீதிமன்றம் தன் அதிகாரத்தை மீறிச் செயற்படாதவாறு பிறப்பிக்கப்படும் தடை நீதிப் பேராணையையும் மேன் முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மேலும் குறித்த வழக்கில் 2 ஆவது சந்தேக நபராக நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை பெயரிட்ட சட்டமா அதிபரின்  ஆலோசனையையும் வலுவிழக்கச் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரஞ்சன் ராமநாயக்கவுடன் சேர்ந்து பொய் சாட்சிகளை உருவாக்கச் சதித் திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் விடயம் தொடர்பாக இரண்டாவது சந்தேக நபராக தன்னை பெயரிட்டு இடம்பெறும் வழக்கு விசாரணைகளுக்குத் தடைவிதிக்குமாறு கோரி பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள, எம்பிலிபிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய மேன் முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

இரண்டாம் பிரதிவாதியான சட்ட மா அதிபர் சார்பில் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் சஹீதா பாரியும் 3 ஆம் பிரதிவாதி பொலிஸ் மா அதிபருக்காக சட்டத்தரணி கருணாரத்னவுடன் ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவாவும் ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில் முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் சர்ச்சைக்குரிய தொலைபேசி குரல்பதிவு விவகாரத்தில், மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவுக்கு எதிராக போதுமான சாட்சிகள் எதுவும் இல்லை என பொலிஸ்மா அதிபர் மேன் முறையீட்டு நீதிமன்றுக்கு கடந்த 15 ஆம் திகதி அறிவித்துள்ளார்.

பொலிஸ்மா அதிபர் சார்பில் மேன் முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி உதித்த இகலஹேவா,  இதனை வெளிப்படுத்தினார். இவ்வாறான பின்னணியிலேயே குறித்த வழக்கின் தீர்ப்பினை மேன் முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கடந்த 2020 ஜூன் 08 ஆம் திகதி, நீதிவான் நீதிமன்ற விசாரணைகளுக்கு இடைக்காலத் தடை மேன் முறையீட்டு நீதிமன்றால் விதித்திருந்தமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.