Developed by - Tamilosai
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக, அதானி குழுமம் ஏனைய உட்கட்டமைப்பு கூட்டாண்மைகளை ஆராயும் என்று அதானி குழுமத்தின் தலைவரும், இந்தியாவின் பிரபல வர்த்தகருமான கௌதம் அதானி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையுடனான இந்தியாவின் வலுவான பிணைப்பு பல நூற்றாண்டுகள் பழைமையான வரலாற்று உறவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கௌதம் அதானி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டுள்ள கௌதம் அதானி நேற்றுச் செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த பின்னர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘இலங்கைக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் ராஜபக்ஷவை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு மேலதிகமாக, அதானி குழுமம் ஏனைய உட்கட்டமைப்பு கூட்டாண்மைகளை ஆராயும். இலங்கையுடனான இந்தியாவின் வலுவான பிணைப்பு பல நூற்றாண்டுகள் பழைமையான வரலாற்று உறவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.’ என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பிரத்தியேக இரண்டு விமானங்களில் கௌதம் அதானி உள்ளிட்ட குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நாட்டை வந்தடைந்தனர்.
இவ்வாறு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள கௌதம் அதானி, மேற்கு முனைய அபிவிருத்தி மாத்திரமின்றி, எரிசக்தி துறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டிருந்தது.
இது தொடர்பில் செவ்வாய்க்கிழமையன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேள்வியெழுப்பப்பட்ட போது , ‘ இலங்கைக்குள் முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதற்காக செயற்படுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
இலங்கைக்கு வெளிநாட்டு முதலீடுகள் அத்தியாவசியமானவையாகும். நாம் எதிர்கொள்ளும் டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வாகவும் , நாட்டின் அபிவிருத்திக்காகவும் குறித்த முதலீடுகளை பெற்றுக் கொள்வது விசேட காரணியாகும்.
தற்போது காணப்படுகின்ற நிலைமைகளின் கீழ் உலக நாடுகள் பலவற்றுடன் செயற்படும் போது முதலீட்டார்கள் குறைவாகக் காணப்படுகின்ற நாடு இலங்கை என்ற நிலைமையை சீராக்கி , நாட்டுக்கு முதலீட்டார்களை வரவேற்பது அவசியமாகும்.
அதற்கான வாய்ப்பினை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.’ என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண பதிலளித்தார்.
இந்நிலையில் துறைமுகம், எரிசக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி செயற்றிட்டம் தொடர்பில் இலங்கையின் உயர் அதிகாரிகளுடன் கௌதம் அதானி கலந்துரையாடவுள்ளதாகவும் த ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, இந்திய வர்த்தகர்கள் சிலர் செவ்வாய்கிழமை மாலை மன்னாருக்கு சென்றுள்ளனர். இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக, இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர் சஞ்சய மொஹொட்டால ஆகியோரும் அவர்களுடன் அங்கு சென்றிருந்தார்.
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்கை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கை கடந்த செப்செம்பர் 30 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.
குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டு ஒரு மாதம் கடந்துள்ள நிலையிலேயே அவரது விஜயம் அமைந்துள்ளது.
அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார வலயத்தின் பிரதம நிறைவேற்றதிகாரியான கௌதம் அதானியின் மகன், அதானி பசுமை எரிசக்தி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் உள்ளிட்டோரும் இந்த விஜயத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இதற்கு முன்னர் இந்தியா, ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையில் கூட்டுத் திட்டமாக கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டிருந்தது. தற்போதைய அரசாங்கம் அந்தத் திட்டத்தை நிறுத்தி, மேற்கு முனையத்தை அதானி குழுமம் தலைமையிலான கூட்டுத் திட்டத்திற்கு வழங்கியது.