தமிழ் ஓசை
தமிழ் ஓசை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக பொலிஸ் மா அதிபர் சாட்சி

0 139

உளவுத் துறை பிரதானிக்கும் அரச தலைவருக்கும் இடையே  எப்போதும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கும். சில தகவல்களை உளவுத் துறை பிரதானி, அரச தலைவருக்கு மட்டுமே அறிவிப்பார். அரசியல் சார் தகவல்களாக அவை பெரும்பாலும் இருக்கும்.’ என  பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன தெரிவித்தார்.

நிலையான உளவுத் தகவல்கள் கிடைத்தும் 21/4 உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை  தடுப்பதற்கு அல்லது அதன் தாக்கங்களை குறைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றவியல் பொறுப்புச் சாட்டப்பட்டு,  முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.

இந்த வழக்கினை விசாரிக்க விஷேட ட்ரயல் அட்பார் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த வழக்குகளானது  கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே தலைமையிலான, மேல் நீதிமன்றின் ஆதித்ய பட்டபெதிகே மற்றும் மொஹம்மட் இஸ்ஸதீன் ஆகியோர்  அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில்   நேற்று (29) அவ்வழக்கு 5 ஆவது நாளாக விசாரணைக்கு வந்தது.

இதன்போது முதலில்,  முதல் சாட்சியாளரான முன்னாள்  அரச உளவுச் சேவை  பணிப்பாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவிடம் குறுக்கு விசாரணைகள்  இடம்பெற்றன.

அவரிடம் சாட்சி விசாரணைகள் நிறைவு பெற்றதும், சுமார் 15 நிமிடங்கள் வரை நீதிமன்ற நடவடிக்கைகள்  ஒத்தி வைக்கப்பட்டன.

சாட்சியம் வழங்க அறிவித்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன அங்கு வர தாமதமானமையால் இவ்வாறு நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் 15 நிமிடங்களின் பின்னர் சாட்சி விசாரணைகள் மீள ஆரம்பிக்கப்பட்டது.

இதன்போது, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன,  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகரவுடன் மன்றில் ஆஜராகியிருந்த நிலையில், வழக்குத் தொடுநர்  சட்ட மா அதிபர் திணைக்களத்தின்  பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலீப பீரிஸின் நெறிப்படுத்தலில் சாட்சியமளித்தார்.

உதவி பொலிஸ் அத்தியட்சராக தான் பொலிஸ் சேவைக்குள் பிரவேசித்ததாகவும் தனது சேவை காலத்தில் ஆரம்பம் முதல் சுமார் 9 வருடங்கள் வரை தான் உளவுச் சேவையிலேயே கடமையாற்றியதாகவும் இதன்போது பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

சுமார் 85 ஆயிரம் பேரைக் கொண்ட பொலிஸ்  திணைக்களத்துக்கு தான் தற்போது தலைமை தாங்குவதாக இதன்போது சுட்டிக்காட்டிய பொலிஸ் மா அதிபர்,  பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 56 ஆவது அத்தியாயத்தின் கீழ் உள்ள விடயங்களுக்கு பொலிஸ் மா அதிபர் கட்டுப்படுவதாக தெரிவித்தார். 

அத்துடன் தேசிய பாதுகாப்பு விடயத்தில் பொலிஸ் மா அதிபருக்கு உள்ள பொறுப்பு அளப்பரியது எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.

அரச தலைவருக்கும், உளவுச் சேவை பிரதானிக்கும் இடையே எப்போதும் மிக நெருங்கிய நேரடி தொடர்புகள் இருக்கும் என இதன்போது சுட்டிக்காட்டிய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, எவருடனும் பகிரப்படாத தகவல்கள் அரச தலைவருடன் உளவுச் சேவை பிரதனையால் பகிரப்படும் என குறிப்பிட்டார். 

குறிப்பாக அரசியல் சார் தகவல்கள் அரச தலைவருடன் மட்டுமே உளவுச் சேவை பிரதானியால் பகிரப்படும் என அவர் குறிப்பிட்டார்.

அரச உளவுச் சேவை வழங்கும் தகவல்கள் முழுமையாக இல்லை என்றால், அதனை மையப்படுத்திய நடவடிக்கை தோல்வியடைய வாய்ப்பு உள்ளதாகவும், அரச உளவுச் சேவை வழங்கும் தகவல் ஒன்றினை மையப்படுத்தி மேலதிக விடயங்களை வெளிப்படுத்த  பொலிஸ் மா அதிபருக்கும் பொறுப்புக்கள் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய, தான்  பதில் பொலிஸ் மா அதிபராக இருந்த போது பூஜித் ஜயசுந்தர்வுக்கு எதிரான விசாரணைகள் தன்னால் சி.ஐ.டி.யிடம் கையளிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இது தொடர்பிலான  சட்ட மா அதிபரின் ஆலோசனை கடிதத்தையும் அவர்  கையளித்தார்.

 இதனையடுத்து பிரதிவாதி பூஜித் ஜயசுந்தரவின் சட்டத்தரணி ரொஷான் தெஹிவலவினால்,  சாட்சியாலரான பொலிஸ் மா அதிபர் சந்தன் விக்ரமரத்ன குறுக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த குறுக்கு விசாரணைகளிடையே, பிரதிவாதியான பூஜித் ஜயசுந்தர பொலிஸ் மா அதிபராக இருந்த போது, கடந்த 2019 ஏப்ரல் 9 ஆம் திகதி  அரச உளவுச் சேவை பிரதானியிடமிருந்து கிடைத்த  தகவல், சிரேஷ்ட அதிகாரிகள் பலருக்கு அனுப்பட்டு, அத்தகவலை மையப்படுத்திய மேலதிக நடவடிக்கைகளுக்கு முயற்சிக்கப்பட்டுள்ளதாக தெரிவதாக ஆவணங்களை பார்வையிட்டு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன சாட்சியமளித்தார்.

அத்துடன் அந்த ஆவணங்களில் இருந்த தகவல்களை மையப்படுத்திய ஒரு பாரதூரமான தகவல் அரச உளவுச் சேவைக்கு கிடைத்திருப்பின் அதனை முப்படையினர் உள்ளிட்டோருக்கும் அரச உலவுச் சேவை பிரதானி தெரியபப்படுத்தியிருக்க வேண்டும் எனவும் அதுவே சம்பிரதாயம் எனவும்  பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டார்.

அத்துடன் சட்டத்தரணி ரொஷான் தெஹிவலவின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்ன, முன்னாள் அரச உளவுச் சேவை பணிப்பாளர் ஒரு  பொலிஸ் அதிகாரி என்ற ரீதியில், அவர் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள விதிவிதானங்களுக்கு கட்டுப்படுபவர் என தெரிவித்தார்.

இந்நிலையில் இவ்வழக்கில் பொலிஸ் மா அதிபரின் சாட்சியம் நிறைவு பெற்றதுடன் மேலதிக சாட்சி விசாரணைகள் எதிர்வரும் டிசம்பர் 18 முதல் 21 ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன.

முன்னதாக, தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல் கிடைத்திருந்த போதிலும் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் கடமையை நிறைவேற்ற தவறியதன் ஊடாக  கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கள் பூஜித்த, ஹேமசிறி மீது குற்றம்  சுமத்தப்பட்டுள்ளன.

இந்நிலையிலேயே இவ்விருவருக்கும் எதிராக தனித் தனியான அவழக்கு விசாரணைகளுக்கு மூவர் கொண்ட  சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றை அமைக்க சட்ட மா அதிபர் பிரதம நீதியரசரிடம்  கோரியிருந்தார்.

கடந்த மே மாதம் 3 ஆம் திகதி முன்னாள் பொலிஸ் மா அதிபர்  பூஜித் ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோருக்கு எதிராக, 2019 உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில்,  உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து  கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய தகவல்களை காட்சிப் படுத்தும் நடவடிக்கை  முதலில் கொழும்பு மேல் நீதிமன்றில் சட்ட மா அதிபரால் முன்னெடுக்கப்பட்டது.

பூஜித் ஜயசுந்தர மற்றும் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகிய இருவருக்கும் எதிராக மூவர் கொண்ட விஷேட நீதிமன்றம் ஒன்றின் முன்னிலையில் தனித்தனியாக வழக்கு விசாரணைகளை இரண்டினை முன்னெடுக்குமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை முன்வைக்கும் முகமாகவே இவ்வாறு தகவல்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டன.

அதற்கான கோரிக்கை சட்ட மா அதிபரால், பிரதம நீதியரசரிடம் எழுத்து மூலம் கடந்த மே 3 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

2019 ஏப்ரல் 7 ஆம் திகதிக்கும் 2019 ஏப்ரல் 21 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்,  தேசிய உளவுச் சேவையின் பணிப்பாளர்ளராக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தனவிடம் இருந்து கிடைக்கப் பெற்ற,  இரகசிய மற்றும் உளவுத் தகவல்களை கணக்கில் கொள்ளாது இருந்தமை, அதனை மையப்படுத்தி நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

குறிப்பாக  சஹ்ரான் மற்றும் அவரது குழுவினர் மத வழிபாட்டுத் தளங்கள், ஹோட்டல்கள் மற்றும் வேறு இடங்களில் குண்டுத் தாக்குதல் நடாத்த  ஒருங்கிணைந்துள்ளதாகவும்,   இறுதிக் கட்ட தயார் நிலையில் உள்ளதாகவும் அந்த தகவல்கள் அளிக்கப்பட்டும் அவற்றை கணக்கில் கொள்ளாமல் பராமுகமாக நடந்துகொண்டமை ஊடாக 279 பேரின் மரணத்துக்கும்  சுமார் 500 பேர் வரையிலானோரின் காயங்களுக்கும்  பொறுப்புக் கூற வேண்டும் எனும் வகையில், பூஜித், ஹேமசிறிக்கு எதிராக  தண்டனை சட்டக் கோவையின் 296 மற்றும் 300 ஆம் அத்தியாயங்களின் கீழ் கொலை மற்றும் கொலை முயற்சி குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.