தமிழ் ஓசை
தமிழ் ஓசை

முதன்முதலில் பொது வெளியில் தோன்றினார் தலிபான் தலைவர் !

0 100

 தலிபான் அமைப்பின் உச்சபட்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, வரலாற்றில் முதல்முறையாக மக்கள் முன் தோன்றியுள்ளார்.

ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் அமைந்துள்ள கந்தஹார் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் ஆதரவாளர்களிடம் அவர் பேசியுள்ளார்.

தலிபான் அமைப்பின் உச்சபட்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் ஆன்மீகத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த ஓகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகும் கூட, அவர் பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்துவந்தார்.

புதிய தலிபான் அரசாங்கத்தில் அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்பது குறித்து பல வதந்திகள் பரப்பப்பட்டதுடன் அவர் இறந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் நேற்றுச் சனிக்கிழமை இராணுவ வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பேசுவதற்காக அகுந்த்ஸடா,  தாருல் உலூம் ஹக்கிமா மத்ரஸாவுக்குச் சென்றதாக தலிபான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்ததுடன் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கப்படாத நிலையில், அங்கு எடுக்கப்பட்ட 10 நிமிட வீடியோ தலிபான் சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு, அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் அப்போது  தலைவராக இருந்த முல்லா அக்கர் மன்சூர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அகுந்த்ஸடா தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.