Developed by - Tamilosai
மின்வெட்டு காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவின் தரம் தொடர்பில் அவதானமாக இருக்கவும்- சுகாதார பரிசோதகர்கள் சங்கம்
நாடளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தொடர் மின்வெட்டு காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவின் தரம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
துர்நாற்றம், நிறம் அல்லது வித்தியாசமான வடிவத்தில் இறைச்சி உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை விற்பனை செய்வதையோ அல்லது கொள்வனவு செய்வதையோ பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சங்கத்தின் தலைவரான உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களில், மனித நுகர்வுக்குத் தகுதியற்ற இறைச்சி மற்றும் பாலை தொடர்ந்து விற்பனை செய்த 387 கடைகளுக்கு எதிராக அதிகாரிகள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
7 மணி நேர மின்வெட்டு காரணமாக குளிர்சாதன பெட்டிகள் செயற்படாததால் உணவுப் பொருட்கள் பழுதடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் போது வர்த்தகர்கள் பொறுப்புடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடைகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.