தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மிக மோசமான இனவாதி ஞானசாரர் தலைமையில் ஒரு செயலணி- சுரேஷ்

0 309

மிக மோசமான இனவாதியைக் கொண்டுவந்து ஒரே நாடு ஒரே சட்டம் என்று சொல்லச் சொன்னால் தமிழர்களையும் முஸ்லிம்களையும் இந்த நாட்டிலிருந்து விரட்டுவதும், அவர்களுக்கு எதுவுமே இல்லாமல் செய்வதும்தான் இவர்களது நோக்கமா? என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்: ஒரே நாடு ஒரே சட்டம் என்பது தொடர்பாக ஞானசார தேரர் தலைமையில் 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இலங்கை போன்ற பல மொழிகள் பல மதங்கள் பல கலாசாரங்கள் கொண்ட வேறுபட்ட இனங்கள் வாழக்கூடிய நாட்டிலே பல்வேறு விதமான சட்ட திட்டங்கள் இருப்பது என்பது இயல்பானது. உலகத்திலும் பல்வேறுபட்ட சட்டங்கள் இருக்கின்றன.

அமெரிக்காவின் சில மாநிலங்களில் மரண தண்டனை சட்டம் இருக்கின்றது, சில மாநிலங்களில் இல்லை.

இலங்கையிலும் கூட யாழ்ப்பாணம் தேசவழமைச் சட்டம், கண்டியச் சட்டம், ஷரிஆ சட்டமென பல சட்டங்கள் காணப்படுகின்றன. இது இன்று நேற்றல்ல நீண்டகாலமாக வழிவழியாக வந்த சட்டங்கள். அவை இன்றுவரை நடைமுறையில் இருக்கின்றன.

இவ்வாறான சூழ்நிலையில் தான் ஜனாதிபதியால் ஒரே நாடு ஒரே சட்டம் என்பதன் அடிப்படையிலேயே இலங்கையினுடைய மிக மோசமான இனவாதி எனக் கூறப்படும் ஞானசார தேரரின் தலைமையில் ஒரு செயலணி உருவாக்கப்பட்டிருக்கிறது.

பர்மாவில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் கொலைசெய்யப்பட்ட பொழுது அதற்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டவர்.

 இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிராக இனவாதக் கருத்துக்களை தொடர்ச்சியாக பேசிக்கொள்ளக் கூடியவர்.

முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்தக்கேணியில் நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த பிக்குவின் உடலைத் தகனம் செய்தவர்.

நீதிமன்றத்தின் கட்டளைகளை ஏற்க மறுத்ததன் காரணமாக அவரை நீதிமன்றம் தண்டித்து சிறைத் தண்டனை வழங்கியிருந்தது.அதன் பின்பு பொதுமன்னிப்பில் விடுதலையானார்.

இவ்வாறான ஒருவரது தலைமையில் ஒரே நாடு ஒரே சட்டம் என்று பேசுகின்ற பொழுது கேலியாகவும் சிரிப்புக்கிடமாகவே காணப்படுகின்றது.

இந்த நாடு எதனை முன்னெடுத்துச் செல்கின்றது என்பது பெரிய கேள்வியாக இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.