தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மாவீரர் நாள் நினைவேந்தல்நிகழ்வுகளுக்குத் தடை

0 123

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யக்கோரி முல்லைத்தீவு பொலிஸாரால் இன்று நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதனடிப்படையில் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 12 பேருக்கு மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தத் தடை விதித்து முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார்.

 முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணியின் பொருளாளருமான அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இழஞ்செழியன், சமூக செயற்பாட்டாளர் முத்துராசா சிவநேசராசா , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகன், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமூகச் செயற்பாட்டாளர் தம்பையா யோகேஸ்வரன், சமூக செயற்பாட்டாளர் இசிதோர் அன்ரன் ஜீவராசா, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி, சமூக செயற்பாட்டாளர் பேதுருப்பிள்ளை ஜெராட், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், சமூக செயற்பாட்டாளர் கனகசபாபதி விஸ்வலிங்கம் விக்னேஸ்வரன் ஆகிய பன்னிரெண்டு பேர் மற்றும் இவர்களது குழுவினர்களுக்கே இந்தத் தடையுத்தரவு பொலிஸாரால் பெறப்பட்டுள்ளது.

வருடம்தோறும் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் உறவுகளால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைய வருடந்தோறும் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை மாவீரர் வாரமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற நிலையில் கார்த்திகை மாதம் 27 ஆம் திகதி துயிலுமில்லங்களில் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

இவ்வாறு ஆண்டு தோறும் தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி வருவதோடு கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் மாவீரர் நாள் நிகழ்வுகளை அனுஷ்டிக்க முடியாத நிலை உருவாக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்க காலத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை செய்ய அனுமதிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. 
இந்நிலையில் கடந்த வருடம் முதல் நீதிமன்றங்களில் தடை உத்தரவைப் பெற்று இந்த அரசாங்கம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்து வருகின்றது.

இதனிடையே இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகத் தெரிவித்து அதற்கான தடையுத்தரவை பெறுவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தில் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதனடிப்படையிலேயே மேற்கண்டவாறு தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.