தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மாணவர்கள் அனைவருக்கும் பைஸர் தடுப்பூசி: திகதி அறிவிப்பு

0 134

 கொரோனா தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் 18, 19 வயதுடைய பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் பைஸர்  தடுப்பூசி நாடளாவிய ரீதியில் ஓக்டோபர் மாதம் 21ஆம் திகதி வியாழக்கிழமை முதல் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் வட மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் இத்தடுப்பூசியானது வழங்கப்படவுள்ளது.

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாவது தடவையாக தோற்றவிருக்கின்ற மாணவர்களுக்கும் அவர்களது பாடசாலைகளிலேயே இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் பாடசாலையைவிட்டு விலகிய 18, 19 வயதுடையவர்களுக்கு அவர்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் சனிக்கிழமைகளில் இத்தடுப்பூசியானது வழங்கப்படும்.

இத்தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கு 18, 19 வயதுடைய அனைவரும் தமது தேசிய அடையாள அட்டையை அன்றையதினத்தில் தமது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் சமர்ப்பித்து தமது வயதை உறுதிப்படுத்திக்கொள்வது அவசியமாகும்.

தடுப்பூசி அல்லது வேறுமருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்குத் தடுப்பூசி வழங்குவதற்கு யாழ். போதனா வைத்தியசாலையிலும், தெல்லிப்பழை, பருத்தித்துறை, சாவகச்சேரி மற்றும் ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைகளிலும் எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 23, 30ஆம் திகதி சனிக்கிழமைகளில் வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் அல்லது பாடசாலையில் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சுகாதார வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய தடுப்பூசியைப் பாதுகாப்பாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாறு 18, 19 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி வழங்கலானது முடிவுக்குவரும் நிலையில் அதனைத் தொடர்ந்து 17, 16, 15 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.