Developed by - Tamilosai
இந்தியாவின் குஷிநகர் சர்வதேச விமான நிலைய திறப்புவிழாவில் கலந்து கொள்ளும் மஹாசங்கத்தினர் இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோதியினால் குஷிநகர் சர்வதேச விமான நிலையம் நாளை (20-10-2021) திறந்துவைக்கப்படவுள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்தர்ப்பத்தில் முதலாவது விமான நிலையம் இலங்கையிலிருந்து வருகை தருமாயின் அது குறித்து பெரும் மகிழ்ச்சியடைவதாக இந்திய பிரதமர் இதற்கு முன்னதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்திருந்தார்.
அதற்கமைய குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனப்படுத்தப்படுவதை குறிக்கும் வகையில் இலங்கையிலிருந்து புறப்பட்டு செல்லும் ஸ்ரீலங்கன் விமானம் முதலாவதாக அங்கு தரையிறக்கப்படவுள்ளது.
இந்த வரலாற்று சிறப்புமிக்க பயணத்தில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய அஸ்கிரி பீடத்தின் அநுநாயக்கர் வெண்டருவே உபாலி தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் நூறு பேர் பங்கேற்கவுள்ளனர்.
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் அசோக் பத்திரகே உள்ளிட்ட தூதுவர்கள் இவ்விஜயத்தில் இணைந்து கொள்ளவுள்ளனர்.
குஷிநகருக்கு விஜயம் செய்யும் மஹாசங்கத்தினருக்கு அதற்கான அனுமதிப் பத்திரங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவால் வழங்கி வைக்கப்பட்டன.