தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மலையகத்திற்கான பல்கலைக்கழகம் விரைவில்

0 189

மலையகத்திற்கான பல்கலைக்கழகம் ஒரு சில காரணங்களால் தாமதமாகினாலும் கூட மிக விரைவில் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் உருவாக்கப்படும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் நிதிச்செயலாளாருமான மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்தார்.

ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனைக்கமைய கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் அங்குராங்கெத்த பிரதேச சபைக்குட்பட்ட நாமகள் கபரக்கலை தமிழ் வித்தியாலயத்தின் ஆசிரியர் விடுதி மற்றும் உயர்தரம் ஆரம்பிப்பதற்கான புதிய கட்டிடம் என்பன திறந்து வைக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் தலைமையில் நேற்று (01) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இன்று மலையகத்தில் வளங்கள் உள்ள பாடசாலைகள் பல இருக்கின்றன.

ஆனால் அவற்றில் பெறுபேறுகள் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன. ஒரு சில பாடசாலைகளில் வளங்கள் பற்றாக்குறையாக காணப்படுகின்ற போதிலும் அவற்றில் நல்ல பெறுபேறுகள் கிடைத்துள்ளன. இந்த பாடசாலையும் அப்படித்தான் நல்ல பெறுபேறுகளை மாணவர்கள் பெற்றுள்ளார்கள்.

நான் கல்வி அமைச்சராக இருந்த போது கஸ்டமான பாடசாலைகளுக்கு 2000 லட்சம் ரூபா கல்வி அபிவிருத்திக்காக பெற்றுக் கொடுத்துள்ளேன். மலையத்தினை கல்வியின் மூலம் தான் மாற்றம் முடியும் என்பதனை உணர்ந்து கடந்த காலங்களில் சௌமிய மூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் தற்போது உள்ள ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகிய அனைவரும் கல்விக்கு முக்கியத்துவமளித்து தான் செயப்பட்டு வந்துள்ளனர் வருகின்றனர்.

ஒரு வருட காலப்பகுதியில் நான் கல்வி அமைச்சராக இருந்த போது 2000 பட்டதாரி நியமனங்கள் பெற்றுக்கொடுத்தேன். அதில் 347 பட்டதாரிகளை தோட்டப்புற பாடசாலைகளுக்கு பெற்றுக்கொடுத்தேன்.; அவர்களில் ஒருசிலர் எங்களை தூர இடங்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக திட்டினார்கள். தற்போது நல்ல பெறுபேறுகள் கிடைக்கப்பெற்றதும் அவர்களும் சந்தோசப்படுகிறார்கள்.

அதே நேரம் ஒரு காலத்தில் நாங்கள் பெருந்தோட்ட தொழில் துறையை நம்பி இருந்தோம். ஆனால் தற்போது அந்த துறையினை மாத்திரம் நம்பியிருக்க முடியாது. நாங்கள் மாற்றுத்தொழில்களுக்கு செல்ல வேண்டும். குறிப்பாக அரச துறையில் தொழில் வாய்ப்புக்களை பெற வேண்டும். ஆகவே நீங்கள் கல்வி கற்றால் மாத்திரம் தான் அதனை செய்ய முடியும் எனவே கல்விகாக பெருவாரியான நிதியினை அரசியல் வாதிகள் என்ற வகையில் செலவு செய்து வருகிறோம. கடந்த காலங்களில் மாத்திரம் கல்விக்காக நூறு மில்லியன் ரூபாய்களை பெற்றுக்கொடுத்துள்ளோம்.

அது மாத்திரமின்றி ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்களை பெற்றுக் கொடுத்துள்ளோம். என்ன தான் அரசியல் வாதிகளாக இருந்தாலும் கோடீஸ்வரர்களாக இருந்தாலும் இறுதியில் நாம் கற்ற கல்வி மாத்திரம் கைகொடுக்கும். ஒரு சில அரசியல் தலைவர்கள் பாராளுமன்றத்தில் மாத்திரம் பேசிவிட்டால் எல்லாம் வந்து விடும் என்று நினைக்கிறார்கள். உண்மையில் எதனையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் தலைவர்களிடம் பேச வேண்டும். அதனை அன்று முதல் இன்று வரை இ.தொ.காவின் தலைவர்கள் செய்து வந்துள்ளார்கள். இன்று எமக்கு இளம் தலைவர் ஒருவர் கிடைத்துள்ளார். அவர் இந்த சமூகத்திற்கு தேவையான விடயங்களை எதிர்காலத்தில் நிச்சயம் பெற்றுக்கொடுப்பார். நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது மாணவர்களுக்கு நல்ல பெறுபேறுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் அதற்கு என்ன தேவையோ அதனை நாங்கள் பெற்றுக்கொடுப்போம் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கடந்த வருடம் இடம்பெற்ற சாதாரண தர பரீட்சை மற்றும் தரம் 05 புலமை பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் , பதக்கங்களும் வழங்கி வைக்கப்பட்டன

Leave A Reply

Your email address will not be published.