Developed by - Tamilosai
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை வளாகத்தில் வைத்து திடீர் மரண விசாரணை அதிகாரி மீது மதுபோதையில் சென்ற குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்த குறித்த அதிகாரி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரந்தன் – குமரபுரம் பகுதியைச் சேர்ந்த 58 வயது நபர் ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்தார்.
குறித்த நபரின் சடலத்தின் மாதிரி பி.சி.ஆர். பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு நேற்று 7 மணியளவில் அதற்கான முடிவு வெளியாகியது.
இந்நிலையில் இரவு 9. 30 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மதுபோதையில் சென்ற பரந்தன் பகுதியில், விருந்தினர் விடுதி ஒன்றை நடத்திவரும் விடுதி உரிமையாளர் உள்ளிட்ட 14 பேர் கொண்ட குழுவினர், தொலைபேசியில் திடீர் மரண விசாரணை அதிகாரியை அழைத்து குறித்த சடலத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து குறித்த திடீர் மரண விசாரணை அதிகாரி மீது வைத்தியசாலை வளாகத்தில் வைத்து தாக்குதல் நடத்தியதுடன், அவரது மோட்டார் சைக்கிளையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்த திடீர் மரண விசாரணை அதிகாரி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.