தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மன்னாரில் உயிரிழந்த இளம் பெண் தொடர்பில் வௌிவந்த தகவல்

0 182

மன்னார் கோந்தைப் பிட்டி கடற்கரை பகுதியில் நேற்றைய தினம் (13) காலை சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த யுவதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கீர்த்தனா (வயது-22) எனத் தெரிய வந்துள்ளதோடு, மன்னார் மூன்றாம் பிட்டிப் பகுதியில் தனது சகோதரருடன் வசித்து வந்த நிலையில் மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் கடந்த இரண்டு மாதங்களாகப் பணியாற்றிய நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

குறித்த யுவதியின் தந்தை சிறு வயதிலே மரணித்த நிலையில் தாயின் பராமரிப்பில் குறித்த யுவதி மற்றும் இரு சகோதரர்கள் இருந்தனர்.

தாய் பல்வேறு கூலித் தொழிலில் ஈடுபட்டு கிடைத்த வருமானத்திலே மூவரையும் பராமரித்து வந்துள்ளார்.

குறித்த யுவதி உறவினர் ஒருவருடன் மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை (11) பணி முடிவடைந்த பின்னர் மன்னார் பேருந்து தரிப்பிடத்திற்கு சென்றுள்ளார்.

அதன் போது தனது ஆண் நண்பர் ஒருவருடன் சந்திப்பை மேற்கொண்ட காணொலி வெளியாகியிருந்தது.

பின்னர் வியாழக்கிழமை மாலை மன்னார் பிரதான பாலத்தில் இருந்து அப் பெண் குதித்த நிலையில் நேற்றைய தினம் பெண்ணின் சடலம் கோந்தைப் பிட்டி கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த பெண் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

குறித்த யுவதியின் சடலத்தை தாய் மற்றும் சகோதரர் ஒருவர் இன்றைய தினம் (14) காலை வைத்தியசாலைக்குச் சென்று அடையாளம் காட்டியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.