தமிழ் ஓசை
தமிழ் ஓசை

மக்களை மிகவும் அநாதரவாக ஆக்கி சாகாமல் வாழும் நிலைக்கு இந்த அரசாங்கம் மாற்றியுள்ளது

0 224

நாட்டில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நாட்டு மக்களை தொடர்ந்து ஒடுக்கி மக்களை மிகவும் அநாதரவாக ஆக்கி சாகாமல் வாழும் நிலைக்கு இந்த அரசாங்கம் மாற்றியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டிற்கு கொரோனா வந்து இரண்டு வருடங்கள் ஆகிறது. ஆனால் இன்று வரை இந்த அரசாங்கம் எப்படி இந்த மக்களை அடக்குமுறையில் இருந்து காப்பாற்றும் என்று எந்த திட்டமும் முன்வைக்கப்படவில்லை.

கொழும்பு – மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், 

இந்நாட்டு மக்களின் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது சமீபத்திய நாடகமாகும். மக்களை தொடர்ந்து ஒடுக்கி, அரிசி, சீமெந்து, எரிவாயு மற்றும் எண்ணெய் விலைகளை அதிகரித்து, நாட்டை அநாதையாக்கி, தொழில்துறையினர் உட்பட பொது மக்கள் பயன்படுத்தும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்திய அரசாங்கம் இன்று இந்நாட்டில் பணவீக்கத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

டொலர் நெருக்கடியால், பொருளாதாரம் சரிந்து, மக்கள் சாப்பிட முடியாத நிலையில், நிதி நெருக்கடியிலும் வீதிகள் கார்பெட் போடப்படுகின்றன. இலட்சக்கணக்கில் கம்பளம் விரிக்கப்படுகிறது, தரகுப்பணம் யாருக்கு செல்கிறது? வீதிகள் அமைத்தால் அங்கு வெளிப்படைத்தன்மை இல்லை.

எவ்வாறாயினும், இம்முறை அரசாங்கம் இந்த நாட்டில் பல வீதிகளை கார்பெட் செய்து, பணத்தை அச்சடித்து, மக்கள் மீது மீண்டும் அழுத்தத்தை பிரயோகிக்கின்றது. இதனால் ஏராளமான மக்கள் சிரமப்படுகின்றனர்.

அந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரத்தை எவ்வளவு தான் அரசாங்கம் தக்க வைத்துக் கொண்டாலும், சந்தைக்குப் போகும் போதும், வயல்களுக்குப் போகும் போதும், இந்த அரசாங்கம் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டு வெறுக்கப்பட்டுள்ளது என்பது எல்லோருக்கும் தெரியும்.

இரண்டு வருடங்களில் நாடு வக்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்பதை இந்நாட்டு மக்கள் அறிவர்.

உங்களால் துன்புறுத்தாமல் இருக்க முடியாவிட்டால் வீட்டுக்குச் செல்லுங்கள் அல்லது நடைமுறைத் திட்டத்தைக் கொண்டு வாருங்கள்.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்ல முடியாவிட்டால், மக்களுக்கும் நாட்டுக்குமுள்ள மாற்றுத் தெரிவுகள் என்ன? இல்லாத சொற்ப கையிருப்புகளை விற்று செலவழிக்க வேண்டாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.