தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பௌத்த சிங்கள மக்களின் விருப்பத்தைப் பிரதிபலித்த கொள்கை விளக்கவுரை..

0 239

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கத்தில் நோர்வேயின் ஏற்பாட்டோடு சமாதானப் பேச்சுக்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த 2003 இல், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.

அதுவும் ஐக்கிய தேசியக் கட்சியில் அமைச்சராக இருந்த அமரர் தியாகராஜா மகேஸ்வரனின் ஏற்பாட்டில் சென்றிருந்தபோது, அங்கே உரை நிகழ்த்தியிருந்த மகிந்த ராஜபக்ச ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலையை தென்பகுதிச் சிங்கள மக்களின் குசினிப் பிரச்சனையோடு ஒப்பிட்டுக் கேலியாகப் பேசியிருந்தார்.

அன்று மகிந்த ராஜபக்ச கூறிய குசினிப் பிரச்சனை போன்றே இன்று ஜனாதிபதியாகவுள்ள மகிந்தவினுடைய சகோதரரான கோட்டாபய ராஜபக்சவும் வெறுமனே பொருளாதாரப் பிரச்சனையாகச் சித்தரித்திருக்கிறார்.

மோடிக்கு அனுப்புவதற்கான கடிதத்தைத் தயாரிப்பதற்காகச் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான அணி கொழும்பு- யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நான்கு கூட்டங்களை நடத்தியிருந்த சூழலிலும், சட்டத்தரணி சுமந்திரன் தலைமையிலான அணி அமெரிக்காவுக்குச் சென்று பேச்சு நடத்திய நிலையிலும் ஈழத்தமிழர் விவகாரத்தை பொருளாதாரப் பிரச்சனையாகச் சித்தரித்திருக்கிறார் கோட்டாபய ராஜபக்ச.

அதுவும் தனது ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சி அரசாங்கத்தின் இரண்டாவது கொள்கை விளக்கவுரையிலேயே இவ்வாறு கூறியிருக்கிறார்.

இந்த உரையை கோட்டாபய ராஜபக்ச நிகழ்த்தியபோது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் கலரியில் கொழும்பில் உள்ள அமெரிக்க, இந்திய இராஜதந்திரிகள் உட்பட வெளிநாட்டு இராஜதந்திரிகள், உயர் அதிகாரிகள் எனப் பலரும் இருந்திருக்கிறார்கள்.

இலங்கை தற்போது எதிர்நோக்கியிருக்கும் அந்நியச் செலவாணி நெருக்கடியைக் குறைக்க இந்தியா ஆயிரத்து தொள்ளாயிரம் மில்லியன் டொலர்களை வழங்க உறுதியளித்து உடனடியாகவே ஒரு பில்லியன் டொலர்களை வழங்கவும் இணங்கியுள்ளது.

பதிலாக இந்திய- இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ் பேசும் மக்களின் தாயகமான திருகோணமலையில் உள்ள எண்ணெய்க் குதங்களை இந்தியாவிடம் கையளிக்கும் ஒப்பந்தம் சென்ற ஆறாம் திகதி இலங்கையினால் கைச்சாத்திடப்பட்டுமுள்ளது.

நிதியைப் பெற்றுப் பதிலாக வடக்குக் கிழக்கு மற்றும் தென்பகுதியில் முக்கிய வளமுள்ள பிரதேசங்களை அமெரிக்க ஒத்துழைப்புடன் இந்தியா பெற்றாலும், மேலும் மேலும் நிதியைத் தாருங்கள் இல்லையேல் சீனாவிடம் இலங்கை முழுமையாகச் சென்றுவிடும் என்ற அச்சுறுத்தலையே இலங்கை காலம் காலமாக விடுக்கின்றது என்பது கண்கூடு.

2009 ஆம் ஆண்டு இறுதிப் போர் நடைபெற்றபோது, விடுதலைப் புலிகளை ஒழிக்க ஒத்துழையுங்கள் பின்னர் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்படுமென அமெரிக்க இந்திய அரசுகளிடம் இலங்கை வாக்குறுதி வழங்கியிருந்தது.

இலங்கையின் அந்த வாக்குறுதியை நம்பி அப்போது கொழும்பில் இருந்த அமெரிக்க, இந்திய தூதுவர்கள் இரா. சம்பந்தனை நேரில் சந்தித்து புலிகளை ஒழித்த பின்னர் நிரந்தர அரசியல தீர்வு வழங்கப்படுமென உறுதியளித்திருக்கின்றனர்.

அந்த உறுதிமொழியை சம்பந்தனும் அன்று நம்பியிருக்கின்றார். ஆனால் தான் இவ்வாறு நம்பி ஏமாந்த கதையைச் சம்பந்தன் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதம் ஒன்றில் பகிரங்கமாவே வெளிப்படுத்திக் கவலைப்பட்டுமிருந்தார்.

அமெரிக்க இந்திய அரசுகளை நம்பினேன். ஆனால் 2009 ஆம் ஆண்டு மே மாதத்தின் பின்னரான பத்து ஆண்டுகள் சென்றுவிட்ட நிலையிலும் நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுத்தர அமெரிக்காவும் இந்தியாவும் எதுவுமே செய்யவில்லையெனச் சுட்டிக்காட்டினார்.

இதேபோன்று இன்று கோட்டாபய ராஜபக்ச நிகழ்த்திய கொள்கை விளக்கவுரையில் அரசியல் தீர்வுக்கான ஏதாவது கருத்துக்கள் வெளிப்படும் என்று சம்பந்தன் நம்பியிருந்திருக்க வேண்டும்.

ஏனெனில் மோடிக்கு அனுப்பவுள்ள கடிதத் தயாரிப்பின் பின்னணியில் கோட்டாபய ராஜபக்ச நிச்சயமாக ஏதேனும் கருத்திடுவார் என்று சம்பந்தன் நம்பியிருக்கின்றார்.

சுமந்திரன் அணியின் அமெரிக்கப் பயணத்தின் எதிரொலியும் கொள்கை விளக்கவுரையில் ஏதாவது தாக்கத்தைச் செலுத்தும் என்றும் சம்பந்தன் எதிர்பார்த்திருக்க வாய்ப்புண்டு.

2009 இல் அமெரிக்க- இந்திய அரசுகளின் வாக்குறுதிகளை நம்பியது போன்று 2021 இலும் அமெரிக்க இந்திய அரசுகளின் உறுதிமொழியின் அடிப்படையிலேயே செல்வம் அடைக்கலநாதன், சுமந்திரன் என்ற இரு அணிகளின் செயற்பாடுகள் அமைந்தன.

அதன் பின்னணியில் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவும் இருந்ததாகக் கருதப்பட்டு வரும் நிலையில், கொள்கை விளக்கவுரையில் அவை பிரதிபலித்திருக்கலாம் என்று சம்பந்தன் ஆவலோடு காத்திருந்திருக்கலாம்.

அதனாலேதான், கோட்டாபயவின் உரையில் எதுவுமே இல்லையென்றவுடன் பசில் ராஜபக்சவோடு சம்பந்தன் சீறிப் பாய்ந்திருக்கிறார். உரை வெறும் குப்பை என்றும் ஆவேசமாகத் திட்டியிருக்கிறார்.

ஆத்திரம் மேலோங்கிய நிலையில், நாடாளுமன்ற விருந்தினர் விடுதிக்குச் செல்லும் வாசலில் நின்று பசில் ராஜபக்சவுடன் தர்க்கப்பட்டுமுள்ளார்.

ஆனால் பசில் ராஜபக்ச அமைதியாகவே நின்றதாக நெருக்கமான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூர்மைச் செய்தித் தளத்திற்குக் கூறியுள்ளார். வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் பீரிஸூம் எதுவுமே பேசாமல் வாசலில் நின்ற சம்பந்தனைக் கடந்து சென்றிருக்கிறார்.

இந்தவொரு சூழலில், ஜனாதிபதி இனப்பிரச்சனை பற்றி ஒரு வார்த்தையும் கூறாமல், கடலுக்கு அடியில் அமைக்க திட்டமிடும் டிஜிட்டல் தொழில்நுட்ப கேபிள்களைப் பற்றியே அதிகம் பேசினார் என்றும் ‘உங்கள் இனப்பிரச்சனையையும் கடலுக்கு அடியில் புதைக்க போகிறாரோ’ எனவும் தன்னுடன் உரையாடிய ரணில் விக்கிரமசிங்க கேலியாகக் கூறினாரென மனோ கணேசன் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

ஆனால் சர்வதேச அரங்கில் நோர்வேயின் ஏற்பாட்டுடன் சமாதானப் பேச்சு நடைபெற்றுக் கொண்டிருந்தவொரு சூழலில், தான் பிரதமராக இருந்து கொண்டு தன்னுடைய கட்சி உறுப்பினரான மகேஸ்வரனுடன் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மகிந்த ராஜபக்சவை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி, தென்பகுதிச் சிங்கள மக்களின் குசினிப் பிரச்சனைதான் தமிழர்களின் பிரச்சனையும் என்று சொல்லவைத்தவர்தான் ரணில் விக்கிரமசிங்க.

ஆகவே கோட்டாபய ராஜபக்ச தமிழர்களின் பிரச்சனையை கடலுக்கு அடியில் புதைக்க போகிறாரோ என்று ரணில் விக்கிரமசிங்க மனோ கணேசனிடம் சொல்லியிருப்பது வேடிக்கை.

ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாசா மற்றும் சந்திரிகா போன்ற சிங்கள அரசியல் தலைவர்கள் எவருமே இனப்பிரச்சனைத் தீர்வு விவகாரத்தில் நேர்மையுடன் செயற்படவில்லை என்பதை வரலாறு சொல்லும். குறிப்பாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகச் செயல் இழக்க வைத்த பொறுப்பு ரணில் விக்கிரமசிங்கவையே சாரும்.

வடக்குக் கிழக்குத் தாயகப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்கள், புத்தர் சிலை வைத்தல். புத்த விகாரை கட்டுதல், மற்றும் காணி அபகரிப்பு போன்ற விடயங்கள் அனைத்தும் 2015 இல் மைத்திரி- ரணில் அரசாங்கத்தில் கொழும்பை மையப்படுத்திய திணைக்களங்களினாலேயே மேற்கொள்ளப்பட்டன.

அதாவது தமிழர்களின் மரபுரிமைகளை அழிப்பதற்காக முன்னர் இராணுவத்தைப் பயன்படுத்திச் செய்த அத்தனை வேலைகளையும் 2015 இல் இருந்து பொலிஸாரின் ஒத்துழைப்போடு ஒற்றையாட்சி அரசின் திணைக்களங்கள் முன்னெடுத்திருந்தன.

அத்துடன் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராகவுள்ள சஜித் பிரேமதாச 2015 இல் ரணில் அரசாங்கத்தில் வீடமைப்பு அமைச்சராக இருந்தபோது பௌத்த மரபுரிமைகளைத் தமிழ் மக்களுக்கு அமைத்துக் கொடுத்த வீடமைப்புத் திட்டங்களில் பதித்திருந்தார்.

இந்த அணுகுமுறைகளையே 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் பதவிக்கு வந்த ராஜபக்ச அரசாங்கமும் வடக்குக் கிழக்கில் மேற்கொண்டு வருகின்றது.

ஆகவே சிங்கள மக்களும் சிங்கள அரசியல் கட்சிகளின் தலைவர்களும் மற்றும் பௌத்த குருமாரும் விரும்புவதையே கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கை விளக்கவுரையில் எடுத்துரைத்திருக்கிறார் என்ற முடிவுக்கு வரலாம்.

இதில் ஆச்சரியப்படுவதற்கோ சம்பந்தன் ஆத்திரமடைவதற்கோ எதுவுமேயில்லை.

மாறாகச் சாதாரண கட்சி அரசியலுக்கு அப்பால், ஈழத்தமிழர்கள் ஒருமித்த குரலோடு இன அழப்பு விசாரணை என்றும், வடக்குக் கிழக்கு இணைப்புடன் கூடிய சுயாட்சிக் கட்டமைப்பே நிரந்த அரசியல் தீர்வு எனவும் தொடராக வலியுறுத்த வேண்டும்.

கீழுறங்கிப் போகும் கோரிக்கைகளினாலேயே தமிழர்களின் இறைமையும் சுயமரியாதையும் கேள்விக்கு உள்ளாகும் அவலம் இன்று ஏற்பட்டிருக்கின்றது.

Leave A Reply

Your email address will not be published.