Developed by - Tamilosai
போராட்டம் நடத்தி கூட்டமைப்பினர் குளிர் காய முயல்வது நகைப்புக்குரிய விடயம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியா தெற்கு பிரதேச செயலகத்தில் கிராமிய பொருளாதாரத்தை வளப்படுத்தும் முகமாக பின்தங்கிய கிராமிய பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் 30 குடும்பங்களுக்கு விதை உழுந்து வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்றும், இன்றும் கூட்டமைப்பினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மக்கள் மத்தியில் பெரியளவில் எடுபடவில்லை. அந்த ஆர்ப்பாட்டங்களில் காணப்படும் மக்களின் பங்களிப்பை வைத்து அதனை அறிய முடிகிறது.
இது அவர்களது குறும்திரைப்படம் என்றே சொல்ல வேண்டும். அன்று வயலுக்குள் இறங்கி நீச்சலடிப்பதும், மாட்டு வண்டி ஓடுவதும் என எமது புகைப்பட கலைஞர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக இருந்தது.
அதேபோல் நேற்று கடலுக்குள்ளும் இறங்கியுள்ளார்கள். இன்று கூட வவுனியாவில் ஆர்ப்பாட்டம் பிசு பிசுத்தது என்று கூட சொல்ல முடியாத அளவுக்கு சில நபர்களுடன் நடந்தது.
அரசாங்கத்தால் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை முன்னெடுக்கும் பொழுது ஒரு சில கசப்பான விடயங்களும் இருக்கும். அதனை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். இதில் போராட்டம் நடத்தி கூட்டமைப்பினர் குளிர் காய முனைவது நகைப்புக்குரிய விடயம் எனத் தெரிவித்தார்.