Developed by - Tamilosai
நாடு இன்று முகம் கொடுத்துள்ள இக்கட்டான நிலையில் பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம். எனவே, மக்கள் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும் என ஆளும் தரப்பு பாராளுமன்று உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நீர்ப்பாசனத் துறை அமைச்சின் சுமார் 19 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பூண்டுலோயா எரோல் கீழ்ப்பிரிவு தோட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள குடிநீர்த் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாடு இன்று பெரும் கஷ்டத்திற்கு மத்தியில் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
நாட்டுக்குக் கிடைத்த வருமானங்கள் இல்லாது போயுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாங்கள் நாட்டினை மாதக்கணக்கில் மூடிவைத்து தான் இந்த அளவுக் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளோம்.
ஒரு நாளைக்கு நாட்டை மூடினால் 450 கோடி ரூபா நட்டம் ஏற்படுகிறது.
இந்நிலையில் நாங்கள் மாதக்கணக்கில் நாட்டினை மூடி வைத்திருந்தோம். இன்று எமக்குக் கிடைக்கக் கூடி மிகப்பெரிய வருமானம் சுற்றுலாத்துறை. ஆனால், அத்துறை இன்று பாரியளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. அதனுடன் தொடர்புடைய சுமார் 29 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேநேரம் இன்னுமொரு வருமானமாக வெளிநாட்டில் உள்ளவர்கள் அனுப்பிய அந்நியச்செலவாணியும் இன்று இல்லாது போயுள்ளது.
இதனால் அந்த வருமானமும் எமக்குக் கிடைப்பதில்லை. இதனைத் தவிர ஆடைத் தொழில் மூலம் கிடைக்கப்பெற்ற வருமானமும், இன்று கப்பல் போக்குவரத்து நடைபெறாததன் காரணமாக அந்த வருமானத்தையும் இழந்துள்ளோம்.
ஆகவே நாம் பாரியதொரு நெருக்கடியான நிலையையே சந்தித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.