தமிழ் ஓசை
தமிழ் ஓசை

பொதுமக்கள் வீதிக்கு இறங்கினால் ! அரச படைகள் பதிலளிக்கும் ஆபத்து ! -கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து

0 149

நாட்டின் பொருளாதார நிலைமைகள் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்ற நிலையில்  பொதுமக்கள் வீதிக்கு இறங்குவதற்கான ஏதுநிலைகள் அதிகரித்துவருகின்றன. அவ்விதமான நிலைமையொன்று ஏற்படுமாயின் அம்மக்களுக்கு பதிலளிப்பதற்காக அரசாங்கத்தினால் படைகள் களமிறக்கப்படும் ஆபத்தான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளதாக மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து எச்சரித்துள்ளார்

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு பெண்களுக்கான அரசியல் கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் சிவில் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் பங்கெடுத்த நிகழ்வு ‘ஒன்றிணைவோம்’ என்ற தொனிப்பொருளில் நேற்று முன்தினம் தாஜ் சமுத்திரா ஹொட்டலில் நடைபெற்றிருந்தது.

இதில் அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் சார் விடயங்கள் கலந்துரையாடப்பட்ட நிலையில் இலங்கையைப் பொறுத்தவரையில் காணப்படுகின்ற சவால்கள் மற்றும் அவற்றைவெற்றி கொள்வதற்கு எவ்விதான நகர்வினைச் செய்ய வேண்டும் என்பதை அடிப்படையாக் கொண்டு முடிவுரையொன்றை ஆற்றியபோதே கலாநிதி.பாக்கியசோதி சரவணமுத்து மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு உரையாற்றுகையில் 

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் மனிதர்களுக்கு காணப்படுகின்ற உரிமைகளை அனுபவிப்பது தொடர்பில் காணப்படுகின்ற பிரச்சினைகள் பற்றி பல்வேறு தரப்பினரும் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் மனிதர்களுக்கான அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்துவதை ஏற்றுக்கொண்டு சமவாயச் சட்டத்தில் கையொப்பமிட்டுள்ளது. இருப்பினும் நடைமுறையில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.

அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள உரிமைகளை அனுபவிப்பதற்கு இந்த நாட்டில் உள்ள மக்கள் உரித்தற்றவர்களாக காணப்படுகின்றார்கள். இந்த நிலைமை ஏன் இன்னமும் நீடிக்கின்றது என்பது பற்றிச் சிந்திக்க வேண்டும்.

தற்போது ஆட்சியில் உள்ள ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு வாக்களித்த 69 இலட்சம் வாக்காளர்களும் இந்த விடயத்தினை தம்முள் மீட்டிப்பார்க்க வேண்டியவர்களாக உள்ளனர். 

ராஜபக்ஷ அரசாங்கமானது இரண்டு கூறுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒன்று பௌத்த தேரர்களை உள்ளடக்கிய சங்கத்தினால் சூழப்பட்டுள்ளது. அடுத்து சீருடை தரித்த இராணுவத்தினரால் சூழப்பட்டுள்ளது. இதுவொரு பயங்கரமான நிலைமையாகும்.

இவ்விதமாக சூழப்பட்டுள்ள அரசாங்கத்திடமிருந்து ஜனநாயக விழுமியங்களை, நடைமுறைகளை எதிர்பார்க்க முடியாது. அரசாங்கமும் அவ்விதமாகவே பிரதிபலிக்கின்றது. குறிப்பாக 20ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றி நிறைவேற்று அதிகாரத்தினை வலுப்படுத்தி தனியொரு நபரை சூழ அதிகாரங்கள் குவிக்கப்பட்டுள்ளன.

ராஜபக்ஷவினர் அரசாங்கத்தின் அனைத்துக் கட்டமைப்பிலும் தமது குடும்ப அங்கத்தவர்களை தீர்மானிக்கும் சக்திகளாக அமர்த்தியுள்ளனர். தெற்காசிய அரசியல் கலாசரத்தில் என்றுமே கண்டிருக்க முடியாத அளவிற்கு குடும்பமொன்றின் ஆதிக்கம் வலுவாகியுள்ளது. இதுவொரு துரதிஷ்டமான நிலைமையாகும்.

தற்போது ஒரேநாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான ஞானசார தேரர் தலைமையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயலணியொன்றை நிறுவியுள்ளார். 

இந்தச்செயலணி நாட்டின் சட்டத்தினை இயற்றுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கின்றது. இந்தச் செயலணியில் உள்ள ஞானசார தேரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டவர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அவ்விதமானர் சட்டமியற்றுவதற்கான செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை மகாசங்கத்தினர் எதிர்க்கவில்லை. அதுபற்றி பேசவில்லை.

இவ்விதமாக இருக்கையில் இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை தேசிய இனங்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு, போர்க்குற்றங்களுக்கு உள்நாட்டில் தீர்வு கிடைக்கும் என்று எவ்வாறு நம்பிக்கை கொள்வார்கள். அதனால் தான் அவர்கள் சர்வதேச நீதிவிசாரணையை கோரி நிற்கின்றார்கள்.

போர் நிறைவுக்கு வந்ததன் பின்னர் இந்த நாட்டில் நல்லிணக்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்விதமாக நடைபெறவில்லை. இதில் மகாசங்கத்தினர் பங்களிப்பைச் செய்திருக்க வேண்டும். அவர்கள் துளியேனும் பங்களிப்பைச் செய்யவில்லை. 

இவ்வாறான நிலையில் எவ்வாறு இனங்களுக்கு இடையில் இணக்கத்தினை எதிர்பார்க்க முடியும். மிருசுவில் படுகொலை வழக்கில் இலங்கையில் உள்ள அனைத்து நீதிமன்றங்களாலும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட சுனில் ரத்நாயக்க ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமன்றி அரசாங்கத்தில் இராணுவத்தின் வகிபாகம் முழுமைப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதுரூபவ் நாட்டில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளது. ஆனால் மத்திய வங்கி ஆளுநர் அவ்விதமான எந்த நிலைமைகளும் காணப்படவில்லை என்பது போன்று பிரதிபலிக்கின்றார். ஆனால் அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மிகமோசமான பொருளாதார நிலைமைகள் ஏற்படும் ஆபத்துள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அவ்வாறான நிலைமையொன்று ஏற்படுமாயின் பொதுமக்கள் நிச்சயமாக வீதிக்கு இறங்கி போராட வேண்டிய நிலைமைகளே ஏற்படும். இதில் அரசாங்கத்திற்கு வாக்களித்த 69இலட்சம் பேரும் வீதிக்கு வரவேண்டி ஏற்படும். அவ்விதமான நிலையொன்று ஏற்பட்டால் அரசாங்கம் படைகளை பயன்படுத்தியே பதிலளிப்புக்களை செய்யும் ஆபத்துள்ளது. அந்நிலை ஏற்பட்டால் நிலைமைகள் பாரதூரமாகிவிடும்.

ஆகவே, நாம் நிலைமைகளை மாற்றி அமைக்க வேண்டும். அதற்காக புதிய செயற்றிட்டம் அவசியமாகவுள்ளது. புதிய செயற்றிட்டமொன்றை வகுப்பதற்காக அனைவரும்  அர்ப்பணிப்புடன் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.